#KolkattaDoctorMurder - தடயங்களை திரட்ட 11 மணி நேரமா? உச்சநீதிமன்றம் கேள்வி
கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் கொலை விவகாரத்தில் தடயங்களை திரட்ட 11 மணி நேரமா? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 31 வயதான பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்தும், நீதி கேட்டும் மருத்துவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் தொடர்புடைய குற்றவாளி சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். பெரும் போராட்டத்தை தொடர்ந்து வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. மேலும் பெண் மருத்துவர் கொலை குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இன்று உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு விசாரணை தொடர்பான இருதரப்பு வாதங்களும் முன்வைக்கப்பட்டன.
அதன் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்களில், கைது செய்யப்பட்டிருக்கும் சஞ்சய் ராயிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆகஸ்ட் 8ஆம் தேதி மருத்துவமனையில் இருந்ததை அவர் ஒப்புக்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.நெஞ்சகப் பிரிவு வார்டில், உயிரிழந்த பெண் மருத்துவரும், மற்றும் நான்கு இளநிலை மருத்துவர்களும் பணியில் இருந்தபோது, இரவு 11 மணிக்கு, அங்கே சஞ்சய் ராய் இருப்பது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. சஞ்சய் ராய், மருத்துவர்களையே பார்த்துக் கொண்டிருப்பதும் தெரிகிறது.
இதையடுத்து, அந்த 4 மருத்துவர்களில் யாரேனும், அன்றைய தினம் சஞ்சய் ராய் அங்கு இருந்ததை கவனித்தார்களா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், ஆகஸ்ட் 9ஆம் தேதி அதிகாலை 1 மணிக்கு, பெண் மருத்துவர் கருத்தரங்கு அறைக்குள் செல்வதும், பிறகு, 2.30 மணிக்கு, இளநிலை மருத்துவர், அவரிடம் பேசுவதும் பதிவாகியிருக்கிறது. இதுவே, அவர் கடைசியாக இருந்த காட்சியாக உள்ளது.
அந்த இளநிலை மருத்துவரிடம் விசாரித்த போது, தன்னிடம் பேசிவிட்டு, அவர் உறங்கச் சென்று விட்டதாகக் கூறியுள்ளார். இதன்பிறகு, அதிகாலை 4 மணிக்கு சஞ்சய் ராய் மீண்டும் மருத்துவமனைக்குள் நுழைவது சிசிடிவியில் பதிவாகியிருக்கிறது. எனவே, அதையொட்டி குற்றம் நடந்திருக்கலாம் என்று சிபிஐ சந்தேகிக்கிறது.
மேலும், இன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது,
- பெண் மருத்துவர் கொல்லப்பட்ட தகவல் காவல்துறையினருக்கு கிடைத்த பின் 11 மணி நேரம் என்ன நடந்தது?
- மேற்கு வங்க காவல்துறை பின்பற்றிய நடைமுறையை இந்த நீதிமன்றம் 30 ஆண்டுகால அனுபவத்தில் கண்டதில்லை.
- முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய 14 மணி நேரம் ஆகியிருக்கிறது.
- தகவல் கிடைத்ததும், கல்லூரி முதல்வர் விரைந்து சம்பவ இடத்துக்குச் சென்றிருக்க வேண்டாமா?
- யாரைக் காப்பாற்ற அவர் முயன்றிருக்கிறார்?
- இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்குப் பதிவு செய்யப்படுவதற்கு முன்பே, எப்படி உடல் கூறாய்வு செய்யப்பட்டது? என்றும் உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது.
காவல்துறை நாள் குறிப்பில் சம்பவம் தொடர்பாக பதிவான நேரத்திலும், மருத்துவமனை சொல்லும் நேரத்திலும் முரண்பாடு இருப்பதையடுத்து, அடுத்த விசாரணையின்போது, பெண் மருத்துவர் சம்பவத்தை முதலில் விசாரணை நடத்த மருத்துவமனைக்குச் சென்ற காவலர் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ இன்று தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில், பெண் மருத்துவர் கொலை வழக்கில், கொல்கத்தா காவல்துறையினர் நடத்திய விசாரணையின் நேரத்தில் முரண்பாடுகள் இருப்பதாகக் குற்றஞ்சாட்டியிருக்கிறது.
இதையும் படியுங்கள் : “அன்பின் மூலமாக இந்த உலகில் வெறுப்பை ஒழிப்போம்” – ஜம்மு-காஷ்மீரில் #RahulGandhi பேட்டி!
அது மட்டுமல்லாமல், ஆர்ஜி கர் மருத்துவமனையில் பல நிர்வாக மற்றம் நிதி முறைகேடுகள் நடந்திருப்பதையும் சிபிஐ சுட்டிக்காட்டியிருக்கிறது. அதாவது மருத்துவமனையில் இருக்கும் சிசிடிவி கேமராக்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டவை என்றும் சொந்தமாக வாங்கி பொருத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஐ தரப்பில் ஆஜரான துஷார் மேத்தா கூறுகையில்,
"பெண் மருத்துவரின் உடல் தகனம் செய்யப்பட்ட பிறகே, மறுநாள் காலை 11.45 மணிக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், உடல் கூறாய்வும் கூட, மூத்த மருத்துவர்கள் மற்றும் பலியான பெண்ணின் நண்பர்கள் அறிவுறுத்திய பிறகே விடியோ பதிவு செய்யப்பட்டிருக்கிறது, எனவே, மூத்த மருத்துவர்களே இந்த வழக்கில் சந்தேகத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது"
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.