கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பிறந்த நாளில் அமைதி பேரணி!
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் கடந்தாண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி பணியில் இருந்த பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்தியா முழுவதும் உள்ள மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டி போராட்டங்களை முன்னெடுத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக சிபிஐ, சஞ்சய் ராய் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அதன் அடிப்படையில் கடந்த ஜன. 18ஆம் தேதி சீல்டா நீதிமன்றம், சஞ்சய் ராயை குற்றவாளி என தீர்ப்பளித்து அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது.
இந்த நிலையில் உயிரிழந்த பயிற்சி மருத்துவரின் பிறந்த நாளான இன்று (பிப்.09 அவருக்கு ஏற்பட்ட அநீதியை கண்டித்து கொல்கத்தா பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகிலுள்ள கல்லூரி சதுக்கத்தில் இருந்து ஷியாம் பஜார் வரை அமைதி பேரணி நடத்தப்பட்டது. சுமார் 5 கிலோமீட்டர் தூரம் வரை நடைபெற்ற இந்த பேரணியில் சீனியர் மற்றும் ஜுனியர்கள் மருத்துவர்கள் உட்பட பல்வேறு துறையை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.