கொல்கத்தா பெண்மருத்துவர் கொலை வழக்கு - குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை!
கொல்கத்தாவில் பணியில் இருந்த பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதித்து கொல்கத்தா சீல்டா நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும் குற்றவாளிக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளது.
பெண் மருத்துவர் கொலை வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என்று கடந்த வாரம் தீர்ப்பளிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு விதிக்கப்படும் தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று குற்றவாளி சஞ்சய் ராய் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.
அப்போது தான் எந்த குற்றமும் செய்யவில்லை எனவும், சித்ரவதை செய்து தன்னை குற்றவாளியாக சித்தரித்ததாகவும், அனைத்து ஆவணத்திலும் கையெழுத்து வாங்கியதாகவும் சஞ்சய் ராய் வாதம் செய்தார். சிபிஐ தரப்பில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
மரண தண்டனை விதிக்க வேண்டாம் எனவும் மாற்று தண்டனை வழங்கிட வேண்டும் எனவும் குற்றவாளி சஞ்சய் ராய் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
வழக்கின் முழு விவரம்;
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கார் அரசு மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி பணியில் இருந்த பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டார். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த கொடூர சம்பவத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது.
இந்த வழக்கு தொடர்பாக மருத்துவமனையில் பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்தனர். கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது. அப்போது, கொலை சம்பவம் தொடர்பான ஆதாரத்தை சேதப்படுத்தியதாக அந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் ஆகியோரை சிபிஐ கைது செய்தது.
தொடர்ந்து பல நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் மேற்கு வங்க மருத்துவர்கள் ஈடுபட்ட நிலையில், பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் மரண தண்டனை விதிக்கப்படும் எனும் சட்டத்தை அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கொண்டு வந்தார். இந்நிலையில் இந்த வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.