கொடநாடு வழக்கு: நேரில் ஆஜராக எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு!
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு அளித்த சென்னை உயர் நீதிமன்றம், சாட்சியங்களை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்து உத்தரவிட்டுள்ளது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புப்படுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்கக் கோரியும், ரூ.1.10 கோடி மானநஷ்ட ஈடு வழங்கக் கோரியும் முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதின்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவில், “அதிமுகவின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற நிலையில், தன் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் தனபால் பொய்யான தகவல்களை கூறி வருகிறார். அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சியின் செல்வாக்கை குலைக்கும் நோக்கத்தில், தனது அரசியல் எதிரிகளின் தூண்டுதலால் தனபால் இது போல் பேட்டிகள் அளித்து வருகிறார். மேலும் கொடநாடு வழக்கில் சாட்சிகளை கலைத்ததாக கைது செய்யப்பட்ட தனபால், மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி ஜாமீன் பெற்றுள்ளார்.” இவ்வாறு அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது. தமது வீட்டில் சாட்சியத்தைப் பதிவுசெய்ய வழக்கறிஞர் ஆணையர் ஒருவரை நியமிக்க வேண்டும். தற்போது எதிர்க்கட்சித் தலைவராக உள்ள தனக்குள்ள பாதுகாப்பு வழிமுறைகள் காரணமாக, உயர்நீதிமன்ற வளாகத்துக்கு வரும்போது, மற்ற வழக்குகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும்.
இந்தச் சிக்கல்களைத் தவிர்ப்பதற்கவே வழக்கறிஞர் ஆணையர் ஒருவரை நியமிக்க வேண்டும். மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராவதை வேண்டுமென்றே தவிர்க்கவில்லை. அனைத்து சட்ட நடைமுறைகளையும் பின்பற்ற தயாராக இருக்கிறேன். வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டுமென்ற இந்த மனுவை ஏற்காவிட்டால், அது தனக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும்” என மனுவில் கூறியிருந்தாா்.
இந்நிலையில் இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று வழக்கறிஞர் ஆணையராக வழக்கறிஞர் எஸ். கார்த்திகை பாலன் என்பவரை நியமித்து உத்தரவிட்டார். ஒரு மாதத்திற்குள் சாட்சிகளை பதிவு செய்து முடிக்க வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதி, அதனை அறிக்கையாக ஜனவரி 12-ம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தார்.