Kim Soo Hyun நடிப்பில் உருவாகி வரும் #KnockOff - DisneyPlusல் வெளியாகும் என அறிவிப்பு!
கிம் சூ ஹியுன் நடிப்பில் உருவான ‘Queen of Tears’ தொடருக்கு பின்னர் நாக் ஆஃப் எனும் புதிய கொரியன் டிராமா தொடர் உருவாகி வருவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கிம் சூ ஹியுன், கிம் ஜி வோன், பார்க் சங் ஹூன் உள்ளிட்டவர்களின் நடிப்பில் வெளியான தென்கொரிய தொடர்தான் ‘Queen of Tears’. ஜங் யங் வூ, கிம் ஹீ வோன் ஆகியோர் இயக்கிய இந்த தொடரை ஸ்டுடியோ ட்ராகன் நிறுவனம் தயாரித்திருந்தது.
‘Queen of Tears’ தொடரின் முதல் எபிசோட் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த மார்ச் 9-ம் தேதி வெளியானது. வார இறுதி நாட்களில் 2 எபிசோட்களாக வெளியாகிய இந்த தொடருக்கு உலகளவில் ரசிகர்கள் அதிகம் உள்ளனர். தென்கொரிய திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் கிம் சூ ஹியுன், கிம் ஜி வோன் நடித்துள்ளதால், தொடரின் மீது தொடக்கம் முதலே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் உலகளவில் பார்வையாளர்களை வாரம் வாரம் குவித்து வந்த ‘Queen of Tears’ தொடர் உச்சம் தொட்டது. அதாவது நெட்ஃபிளிக்ஸ் குளோபல் டாப் 10 தொடர்களின் (Non-English) பட்டியலில் முதலிடத்திற்கு ‘Queen of Tears’ முன்னேறியது. அமெரிக்கா, கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா, கிரீஸ், துருக்கி, சவுதி அரேபியா, பிரேசில், மெக்சிகோ உட்பட உலகளவில் மொத்தம் 68 நாடுகளில் TOP 10 பட்டியலில் ‘Queen of Tears’ தொடர் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ‘Queen of Tears’ தொடருக்கு பிறகு கிம் சூ ஹியுன் நடித்து வரும் புதிய தொடர் நாக் ஆஃப். இத்தொடர் டிஸ்னி பிளஸில் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாக் ஆஃப் தொடர் விரைவில் வெளியாகும் என இன்று டிஸ்னி பிளஸ் கேஆர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.