"நவீன கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னன்" - கிங் கோலி ...!
நவீன கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வரும் விராட் கோலியின் சாதனை குறித்து விரிவாக அலசுகிறது இந்த தொகுப்பு.
சாதனைகள் படைப்பது எளிதல்ல, அதே சாதனைகளை முறியடிப்பது அரிதிலும் அரிது. சில சரித்திர நிகழ்வுகள் நிகழும் போது தான், நம்மை சார்ந்தவர்களுக்கும், நம்புபவர்களுக்கும், நெகிழ்ச்சியான மற்றும் உணர்வுப்பூர்வமான அனுபவங்களை நீங்கள் கொடுத்திட முடியும். கிரிக்கெட் உலகிற்கு அத்தகைய உணர்வுப்பூர்வமான தருணத்தை பரிசளித்திருக்கிறார் இந்த நவீன கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னன் கிங் கோலி.
அதன்படி, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில், யாராலும் நெருங்கக் கூட முடியாது என்று சொல்லப்பட்ட சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்களை கடந்து, புதிய சரித்திரத்தை எழுதியிருக்கிறார் விராட் கோலி. தான் ஆடும் ஒவ்வொரு இன்னிங்ஸிலும் முழு பங்களிப்பை கொடுக்கும் ஒருவரால் மட்டுமே, சச்சினின் சாதனைகளை நெருங்க முடியும். ஏனெனில் அதற்காக அவர் எடுத்துக்கொண்ட காலம் என்பது ஒரு சகாப்தத்துடன் முடிந்துவிடவில்லை.
குறிப்பாக 2003 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில், சச்சின் டெண்டுல்கர் ஒட்டுமொத்தமாக விளாசிய 673 ரன்களே, ஒரு உலகக் கோப்பை தொடரில் தனி ஒரு பேட்டரின் அதிகபட்ச ஸ்கோராக இருந்து வந்தது. ஆனால் நடப்பு உலகக் கோப்பை தொடரில், அந்த சாதனையை 10 இன்னிங்ஸ்களிலேயே முறியடித்து, தனது பெயரை முன்னிலை படுத்திக் கொண்டார் கோலி.
நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 50* ஆவது சதத்தை விளாசினார் கோலி. மைதானமே ஆர்ப்பரித்து போனது.
தனது ஆதிக்கம் மிகுந்த இந்த விளையாட்டு திறனால், கிரிக்கெட்டில் காலத்தால் அழியாத பல பெருமைகளை இந்தியாவிற்கும், தனது ரசிகர்களுக்கும் சமர்ப்பித்துள்ளார் கோலி. அவரது இந்த சரித்திர சாதனையை பாராட்டு வாழ்த்து தெரிவித்துள்ள மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், “ஒரு இந்திய வீரர் எனது சாதனையை முறியடித்ததை காட்டிலும் ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு இருந்திட முடியாது. உலகக் கோப்பை அரையிறுதியில் அதுவும் எனது சொந்த ஊரில், விராட் கோலி இந்த உலக சாதனை படைத்திருப்பது பெருமகிழ்ச்சி தருகிறது என தனது x தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தனது சிறு வயதில், நம்பிக்கை மிகுந்த கனவுகளுடன், தொலைக்காட்சிகளில் சச்சினை பார்த்து வளர்ந்த விராட் கோலி, அதே சச்சினின் முன்பு, மும்பையில் இந்த மாபெரும் உலக சாதனையை படைத்திருக்கிறார். இனி விராட் கோலி படைத்த இந்த சாதனையை ஒருவர் முறியடிக்க வேண்டுமென்றால், அதற்கு குறைந்தபட்சம் 10 முதல் 15 வருடங்களாவது தேவைப்படும். அதுவரை அவரது தலையில் பொருத்தப்பட்டு இருக்கும் கிரீடத்தை பெருமையுடன் தன்வசம் வைத்திருப்பார் விராட்ட கோலி....
- நந்தா நாகராஜன்.