சைவ உணவுகள் மட்டும் தயாரித்தால் அயோத்தியில் 'கேஎஃப்சி'க்கு அனுமதி!
சைவ உணவுகளை மட்டுமே வழங்கினால் கேஎஃப்சி கடைக்கு கூட அயோத்தியில் அனுமதி வழங்க தயார் என்று அயோத்தியில் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 2020 ஆகஸ்ட் முதல் பூமி பூஜை செய்யப்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2.27 ஏக்கர் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிவடையவுள்ள நிலையில், கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை ஜன.22-ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதமர் மோடி குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்தார்.
தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் சாமி தரிசனம் செய்து வருவதால் இந்தியாவின் முக்கியமான ஆன்மீக தலமாக அயோத்தி உருவெடுத்துள்ளது. இதை தொடர்ந்து கோயிலை சுற்றி உள்ள பகுதிகளில் பிரபலமான உணவுக்கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன. கோயிலுக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள இந்த உணவகங்களில் சுவையான சைவ உணவுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
அயோத்தியில் உள்ள அரசு அதிகாரியான விஷால் சிங் இதுகுறித்து பேசிய போது, "அயோத்தி-லக்னோ நெடுஞ்சாலையில் KFC தனது கடையை அமைத்துள்ளது. ஏனெனில் நாங்கள் அசைவ உணவுகளை இங்கு அனுமதிக்கவில்லை. சைவ உணவுகளை மட்டுமே விற்க முடிவு செய்தால், கேஎப்சி நிறுவனத்துக்குக் கூட இடம் வழங்கத் தயாராக உள்ளோம்'' என்றார்.