கேரள உள்ளாட்சி தேர்தல் - வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!
கேரளாவில் 2 கட்டங்களாக உள்ளாட்சி நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி ஆகிய 7 மாவட்டங்களில் கடந்த 9ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து 2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தல் திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 7 மாவட்டங்களில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த தேர்தலில் மொத்தம் 38 ஆயிரத்து 994 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 18ஆயிரத்து 974 பேர் ஆண்கள், 20ஆயிரத்து 20 பேர் பெண்கள் ஆவர். 2-ம் கட்ட தேர்தலில் ஒரு கோடியே 53 லட்சத்து 37 ஆயிரத்து 176 வாக்காளர்கள் வாக்களிக்க இருந்தனர். இதற்காக 18ஆயிரத்து 274 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. அங்கு காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடந்தது. தொடர்ந்து 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. மொத்தம் 72 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கேரளாவில் நடைபெற்ற 2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் சராசரியாக 75.38 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. வாக்குப்பதிவுக்கு பின் வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில், கேரள உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 224 மையங்களில் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இதனையொட்டி வாக்குகள் எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.