தண்டவாளத்தில் படுத்திருந்த நபரை கடந்து சென்ற ரயில்... வைரலாகும் வீடியோ!
திருவனந்தபுரத்தில் தண்டவாளத்தில் படுத்திருந்த நபரை ரயில் கடந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் கடந்த திங்கள்கிழமையன்று மாலை 5 மணியளவில், கண்ணூர் மற்றும் சிராக்கல் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் வரும் நேரத்தில் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் ரயில் அருகே வந்ததும், என்ன செய்வதென்று அறியாமல் அப்படியே தண்டவாளத்தில் படுத்துவிட்டார்.
அவரை ரயில் கடந்து சென்றது. பின்னர் காயங்களின்றி தப்பிய அவர் எழுந்து செல்லும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோ வைரலானதைத் தொடர்ந்து ரயில்வே போலீசார் அந்த நபர் குறித்து விசாரணையை தொடங்கினர். விசாரணையில் அவர் கண்ணூர் பன்னென்பாறை பகுதியை சேர்ந்த பவித்ரன் (56) என்பது தெரியவந்தது. தொடர் விசாரணையில் பவித்ரன் தனது தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்ததாகவும், ரயில் வருவதை கவனிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். ரயில் அருகே வந்ததும் அப்படியே படுத்துள்ளார்.
குடிபோதையில் அவர் படுத்துக் கிடந்ததாக வதந்திகள் பரவிய நிலையில், “நான் குடிபோதையில் இல்லை; என் உயிரைக் காப்பாற்ற தண்டவாளத்தில் படுத்தேன்” என தெரிவித்துள்ளார். மேலும், நான் இன்னும் அந்த அச்சத்தில் இருந்து வெளிவரவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.