"கீழடி ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மாற்றப்பட்டது நிர்வாகம் சார்ந்தது"- மத்திய அரசு விளக்கம்
மக்களவையில் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், கீழடி விவகாரம் குறித்து எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார். அதில்
குறிப்பாக, கீழடி ஆய்வின் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அளித்த ஆய்வு அறிக்கை முறையாக மத்திய அரசால் பகுப்பாய்வு செய்யப்பட்டதா? ஆய்வு அறிக்கை ஏன் நிராகரிக்கப்பட்டது? 9 மாதங்களுக்குள் தொல்பொருள் ஆய்வாளரை பணி மாற்றம் செய்வதற்கான காரணம் என்ன? போன்ற கேள்விகள் இடம்பெற்றிருந்தன.
இதற்கு பதிலளித்துள்ள மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷேகாவத். “ நாடு முழுவதும் நடைபெறும் தொல்பொருள் ஆராய்ச்சிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மத்திய அரசுக்கு ஆராய்ச்சியின் முன்னணி தொல்பொருள் ஆய்வாளர் அறிக்கையை சமர்ப்பிக்கிறார். அந்த அடிப்படையில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட கீழடி தொல்பொருள் ஆய்வு அறிக்கை மத்திய தொல்லியல் துறையின் கீழ் உள்ள பல்வேறு நிபுணர்களிடம் பகிர்ந்து அதன் மீதான கருத்துக்களை பெற்று சில திருத்தங்களை செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், கீழடி தொல்பொருள் ஆய்வு அறிக்கை மத்திய அரசால் நிராகரிக்கப்படவில்லை எனவும், முக்கியமான இடங்களில் தொல்லியல் ஆய்வுகளை கூட்டுப் பணியாக நடைபெற்று வரும் நிலையில் இப்போது கீழடி தொல்லியல் ஆய்வு தமிழக அரசின் வசம் உள்ளது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மேலும், ”தொல்லியல் (அமர்நாத் ராமகிருஷ்ணன்) ஆய்வாளர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்வது நிர்வாகம் சார்ந்தது” எனவும் விளக்கம் அளித்துள்ளார்.