"ரயில்வேக்கு தமிழ்நாடு அரசின் ஒத்துழைப்பு தேவை" - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி!
சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட அம்ரி பாரத் ரயில் பெட்டிகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,
"நாடு முழுவதும் ரயில் போக்குவரத்தை மேம்படுத்த மத்திய அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டுக்கு ரயில்வே துறை சார்பில் செயல்படுத்தப்படும் புதிய திட்டங்களுக்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மக்களின் நலனை விட அரசியல் பெரிதல்ல.
ரயில்வேக்கு இடம் ஒதுக்குவதில் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். ஏழை எளிய மக்களும் வந்தே பாரத் ரயில்களில் பயணிக்கும் அனுபவத்தை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் குறைந்த கட்டணத்தில் அம்ரித் பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது படுக்கை வசதி கொண்ட அம்ரித் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
50 அம்ரித் பாரத் ரயில்களில் அடுத்த 2 ஆண்டுகளில் தயார் செய்யப்படும். நாடு முழுவதும் விபத்துக்களை தடுக்க 10 ஆயிரம் ரயில் என்ஜின்களில் கவாச் தொழில் நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது"
இவ்வாறு ரயில்வே அமைச்சர் அஸ்வினி தெரிவித்தார்.