“கதற கதற பிளாக்பஸ்டர்” - 3 நாள் வசூல் நிலவரத்தை அறிவித்த ‘டிராகன்’ படக்குழு!
அஸ்வத் மாரிமுத்து - பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘டிராகன்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன், கே.எஸ். ரவிக்குமார், மிஷ்கின், சிநேகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருந்தார்.
இப்படம் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று மூன்று நாட்களைக் கடந்துள்ளது. இந்த நிலையில் படத்தில் வசூல் விவரம் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாகத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி எக்ஸ் தளப் பதிவில் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார். அதில், ‘கதற கதற பிளாக்பஸ்டர்’ என்று குறிப்பிடப்பட்டதோடு, இப்படம் உலகளவில் 3 நாட்களில் மட்டும் 55.22 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவரின் பதிவில் தமிழ்நாட்டில் இப்படம் 24.9 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகவும் ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலங்கள் 6.25 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகவும் கேரளா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் 4.37 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இப்படம் வெளிநாடுகளில் 14.7 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.