காஷ்மீர் துப்பாக்கிச்சூடு - தீவிரவாதிகளின் வரைபடங்கள் வெளியீடு!
ஜம்மு – காஷ்மீரில் பஹல்காம் மாவட்டத்தின் பைசரன் எனும் பகுதியில் உள்ள சுற்றுலா தளத்தில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். 17 சுற்றுலா பயணிகள் காயங்களோடு பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே பயங்கரவாதிகளை பிடிக்க ராணுவம் மற்றும் ஜம்மு - கஷ்மீர் காவல்துறை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பஹல்கம் பகுதியில் பாதுகாப்புப்படையினர் தொடர் வாகன தணிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர். மேலும் பஹல்கம் பகுதி முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, அப்பகுதி பாதுகாப்பு படை வீரர்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
அதேவேளையில் உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ரா-வுக்கு அமெரிக்க துணை அதிபர் வருகை தரவுள்ளதை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு மிக மிக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல உத்தரபிரதேச - நேபால் எல்லைப்பகுதியிலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை அதிகரித்திருப்பதாக அம்மாநில டி.ஜி.பி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 3 பேரின் வரைபடங்களை வெளியிட்டது ஜம்மு காஷ்மீர் காவல்துறை. தாக்குதலை நேரில் பார்த்தவர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் படங்கள் வரையப்பட்டுள்ளது.