காஷ்மீர் தாக்குதல் எதிரொலி: ஹனியா அமிர் உட்பட பாகிஸ்தான் நடிகர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் இந்தியாவில் முடக்கம்!
கடந்த 22ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பைசரன் பள்ளத்தாக்கில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. ஆனால் இந்த தாக்குதலுக்கும், தங்களுக்கும் சம்பந்தமில்லை எனவும், நியாயமான மற்றும் நடுநிலையான எந்த விசாரணைக்கும் தயார் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
இதனிடையே இரு நாடுகளுக்கிடையேயான பல ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக சிந்து நதிநீர் ஒப்பந்தம், சிம்லா ஒப்பந்தம் போன்றவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான் பரப்பிலும், பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்பரப்பிலும் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் நடிகர்கள் மற்றும் நடிகைகள் பலரின் சமூக வலைத்தளப் பக்கங்கள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் ஹனியா அமிர் மற்றும் மஹிரா கான் உட்பட பல பாகிஸ்தான் நடிகர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் இவர்களை பின்தொடர்பவர்களால் அவர்களின் இன்ஸ்டா பக்கங்களை அணுக முடியவில்லை. பாகிஸ்தானிய பிரபலங்கள் அலி ஜாபர், சனம் சயீத், பிலால் அப்பாஸ், இக்ரா அஜீஸ், இம்ரான் அப்பாஸ் மற்றும் சஜல் அலி ஆகியோரின் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. முன்னதாக 16 பாகிஸ்தானிய யூடியூப் சேனல்களை இந்தியா தடை செய்தது. முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர் யூடியூப் சேனலும் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.