கரூர் கூட்ட நெரிசல் வழக்கு - உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் என்னென்ன..?
கரூரில் தவெக தலைவர் விஜயின் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலை மையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையை எதிர்த்தும், இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் தவெக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள், வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டனர். தற்போது இந்த தீர்ப்பின் முழு விவரங்கள் வெளியாகியுள்ளது.
அதில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளதால் முதலமைச்சரால் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம் இதுவரையில் சேகரித்த ஆதாரங்கள் ஆவணங்கள் அதேபோல முதல் தகவல் அறிக்கை, தனது விசாரணை முன்னேற்ற அறிக்கை டிஜிட்டல் ஆவணம் உள்ளிட்ட எந்த ஆதாரமாக இருந்தாலும் அதனை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வவழக்கை சிபிஐ ஏற்றிருப்பதால் சிறப்பு விசாரணை குழு மற்றும் ஒரு நபர் ஆணையம் ஆகியவற்றின் செயல்பாடு ரத்து செய்யப்படுகிறது.
சிபிஐ விசாரணையை கண்காணிக்க ஏற்படுத்தப்பட்ட குழு கரூர் விவகாரம் தொடர்பாக விசாரணையை மேற்கொள்ளலாம். அந்த விசாரணை என்பது சுதந்திரமாக மற்றும் வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அமைத்த விசாரணை குழுவில் இடம்பெறும் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் யார் யார் என்பதை குழுவிற்கு தலைமை தாங்கும் நீதிபதியான அஜய் ரஸ்தோகியே முடிவு செய்வார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நாடு முழுவதிலும் உள்ள மக்களின் வாழ்வதற்கான அடிப்படை உரிமைகளை மதிப்பதை உறுதி செய்ய வேண்டியதாக இருக்கிறது அதனால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இதை கருதி சிபிஐ விசாரணைக்கு மாற்றுகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.