மேகதாது அணை கட்ட கர்நாடகம் தீவிரம்: விவசாயிகளின் அச்சத்தை அரசு போக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்!
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "மேகதாது அணை தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கான ஏற்பாடுகளை கர்நாடக அரசு தீவிரப்படுத்தியிருப்பது கவலையளிக்கிறது. இதே கவலையை காவிரி பாசன மாவட்ட விவசாயிகளும் எதிரொலித்திருக்கும் நிலையில், அது குறித்த எந்த கவலையும், உழவர் நலனில் அக்கறையும் இல்லாமல் திமுக அரசு அமைதி காப்பது கண்டிக்கத்தக்கது.
காவிரி ஆற்றில் மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு முடிவு செய்துள்ள கர்நாடக அரசு, அதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து மத்திய அரசிடம் தாக்கல் செய்து விட்டது. மத்திய நீர்வள ஆணையம், காவிரி மேலாண்மை ஆணையம் ஆகியவை புதிய அணைக்கான திட்ட அறிக்கை குறித்து ஆய்வு செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை கடந்த 13-ஆம் நாள் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இது தமிழ்நாட்டிற்கு பெரும் பின்னடைவு என்பதை காவிரி விவகாரத்தில் மத்திய அரசு, கர்நாடக அரசு ஆகியவற்றின் கடந்த கால அணுகுமுறைகளை அறிந்தவர்கள் தயக்கமின்றி ஒப்புக்கொள்வார்கள். ஆனால், இந்த விவகாரத்தில் திமுக அரசு வழக்கம் போலவே அமைதி காத்து, உரிமைகளை தாரை வார்க்க தயாராகிக் கொண்டிருக்கிறது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, மேகதாது அணை கட்டுவதற்கான பணிகளை கர்நாடக அரசு வேகப்படுத்தியுள்ளது. மேகதாது அணை தொடர்பாக கர்நாடக நீர்ப்பாசனத் துறை அதிகாரிகளுடன் கடந்த 18-ஆம் தேதி கலந்தாய்வு நடத்திய அம்மாநில துணை முதலமைச்சரும், நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார், மேகதாது அணை கட்டுவதற்காக ஏற்கனவே விரிவான திட்ட அறிக்கை தயாரித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள போதிலும், அதில் உள்ள சில குறைகளை களைந்து புதிய திட்ட அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்திருக்கிறார். அணை கட்டுவதற்கான தொடக்கக்கட்ட பணிகளை மேற்கொள்ள களத்தில் புதிய அலுவலகங்கள் திறக்கப்பட்டு, பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இன்னொருபுறம், கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா தில்லி சென்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்தித்து மேகதாது அணை கட்டுவதற்கு விரைவாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டுவதில் கர்நாடக அரசு எந்த அளவுக்கு தீவிரமாகவும், உறுதியாகவும் இருக்கிறது என்பதைத் தான் அம்மாநில முதலமைச்சர், துணை முதலமைச்சரின் செயல்பாடுகள் காட்டுகின்றன.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும், அதைத் தொடர்ந்து கர்நாடக ஆட்சியாளர்கள் எடுத்து வரும் நடவடிக்கைகளும் காவிரி பாசன மாவட்ட உழவர்களிடையே பெரும் அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியிருக்கின்றன. காவிரி பாசன மாவட்டங்களில் நேற்று நடைபெற்ற உழவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய உழவர் அமைப்புகளின் பிரதிநிதிகள், காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டப்படுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தக் கூட்டத்தில் பங்கேற்ற உழவர் அமைப்புகளின் தலைவர்கள், மாவட்ட வருவாய் அலுவலரின் கால்களில் விழுந்து மன்றாடியுள்ளனர்.
பாட்டாளி மக்கள் கட்சி ஏற்கனவே வலியுறுத்தியதைப் போன்றே, உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யுமாறு அவர்கள் வலியுறுத்தினர். உழவர்கள் தெரிவித்துள்ள கவலையும், அச்சமும் அர்த்தமுள்ளவை. கர்நாடகத்தில் காவிரி மற்றும் துணை நதிகளின் குறுக்கே இப்போதுள்ள அணைகளின் கொள்ளளவு 114.57 டிஎம்சி ஆகும். இவ்வளவு கொள்ளளவுள்ள அணைகள் இருக்கும் போதே கர்நாடகம் தமிழகத்துக்கு தண்ணீர் தருவதில்லை. 70 டிஎம்சி கொள்ளளவுள்ள மேகதாது அணை கட்டப்பட்டால் கர்நாடக அணைகளின் கொள்ளளவு 184 டிஎம்சியாக அதிகரிக்கும். மேட்டூர் அணை கொள்ளளவை விட கிட்டத்தட்ட இரு மடங்கு தண்ணீரை கர்நாடகம் தேக்கி வைத்தால் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்காது. காவிரி படுகை பாலைவனமாகிவிடும்.
காவிரி பாசன மாவட்ட உழவர்களின் அச்சத்தையும், கவலையையும் திமுக அரசு உணர்ந்து கொண்டதாக தெரியவில்லை. தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பு, கோடிக்கணக்கான உழவர்களின் வாழ்வாதாரம் சார்ந்த இந்த சிக்கல் குறித்தும், இதில் அடுத்தக்கட்டமாக தமிழக அரசு என்ன செய்யப் போகிறது என்பது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வரை வாயைத் திறக்கவில்லை. தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணையை கர்நாடகத்தால் கட்ட முடியாது என்று கூறியதுடன் நீர்வளத்துறை அமைச்சர் அவரது கடமையை முடித்துக் கொண்டார். மத்திய நீர்வளத்துறை அமைச்சராக இருந்த உமாபாரதி, தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டால், அதை ஏற்காமல் திருப்பி அனுப்புவோம் என்று கூறினார்.
ஆனால், அதற்கு பிறகு வந்தவர்கள் தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமலேயே விரிவான திட்ட அறிக்கையை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல், மேகதாது அணைக்கும் தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் அனுமதி அளிக்கப்பட்டால் அரசு என்ன செய்யும்? கர்நாடகத்தில் காவிரி மற்றும் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கபினி, ஹாரங்கி, ஹேமாவதி, சுவர்னவதி ஆகிய அனைத்து அணைகளும் தமிழ்நாட்டை திமுக ஆட்சி செய்த போது, அது செய்த துரோகத்தால் தான் கட்டப்பட்டன. அந்தப் பட்டியலில் இப்போது மேகதாது அணையும் இணைந்து விடக் கூடாது. எனவே, இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது உள்ளிட்ட அனைத்து வாய்ப்புகளையும் ஆராய வேண்டும். அதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை அரசு கூட்ட வேண்டும்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.