Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கன்வார் யாத்திரை...கடைகளின் பெயர் பலகை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

03:08 PM Jul 22, 2024 IST | Web Editor
Advertisement

கன்வாரி யாத்திரை நடைபெறும் பாதையில் உள்ள கடைகளின் உரிமையாளர்கள்  பெயர்களை கட்டாயம் எழுதி வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகளின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Advertisement

உத்தரப் பிரதேசத்தில் சிவபக்தர்கள் 'காவடி யாத்திரை' (கன்வார் யாத்திரை) செல்லும் பாதைகளில் உள்ள உணவகங்களின் பெயர் பலகைகளில் உரிமையாளர்களின் பெயர் கட்டாயம் இடம் பெற வேண்டுமென்ற சர்ச்சைக்குரிய உத்தரவை மாநிலம் முழுவதும் நடைமுறைப்படுத்த பாஜக அரசு முடிவு செய்துள்ளது.

கங்கையையொட்டிய புண்ணியத் தலங்களுக்கு நடைப்பயணமாக சென்று, அங்கு கலசங்களில் நீரை சேகரித்து, தங்களது ஊரில் உள்ள சிவனுக்கு அபிஷேகம் செய்வதற்கான காவடி யாத்திரை, வடமாநிலங்களில் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டு கன்வார் யாத்திரை இன்று தொடங்குவதை முன்னிட்டு, உத்தரப் பிரதேச மாநிலம், முஸாஃபர்நகர் மாவட்டத்தில் காவல்துறை அண்மையில் ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதன்படி, பக்தர்கள் யாத்திரை செல்லும் வழிப்பாதைகளில் உள்ள அனைத்து உணவகங்களின் பெயர் பலகைகளில் உரிமையாளர், அவரது கைப்பேசி எண், முகவரி ஆகியவை கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

காவல்துறையின் இந்த உத்தரவானது கடை வைத்திருக்கும் முஸ்லிம் வணிகர்களை குறிவைத்து பிறப்பிக்கப்பட்டதாக பெரும் சர்ச்சை எழுந்தது. அதேநேரம், குழப்பங்களை தவிர்ப்பதோடு, நல்லிணக்கத்தை பராமரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவும் காவல்துறை விளக்கம் கொடுத்திருந்தது. ஆனால், இதனை மாநிலம் முழுவதும் நடைமுறைப்படுத்த உத்தரப்பிரதேச அரசு முடிவு செய்திருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் உத்தரகண்டின் ஹரித்வாரிலும், ஏராளமான பக்தர்கள் காவடி யாத்திரை மேற்கொள்வர் என்பதால், அந்த மாநிலத்திலும் இதேபோன்ற உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதுகுறித்து அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி கூறுகையில், யாரையும் குறிவைத்து இந்த முடிவு மேற்கொள்ளப்படவில்லை. சிலர் தங்களது அடையாளத்தை மறைத்து, உணவகங்களை நடத்துகின்றனர். இதன் காரணமாக மோதல் சம்பவங்கள் நிகழ்கின்றன. இதுபோன்ற சூழல் ஏற்படாமல் தவிர்க்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து இதுதொடர்பாக முஸ்லிம் வணிகர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கன்வாரி யாத்திரை நடைபெறும் பாதையில் உள்ள கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் வேலை செய்யும் ஊழியர்கள் தங்கள் பெயர்களை கட்டாயம் எழுதி வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகளின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்தது.

வரும் வெள்ளிக்கிழமைக்குள் இந்த முடிவு குறித்து இரு மாநில அரசுகளும் பதில் அளிக்கவும், கன்வார் யாத்திரையின்போது, அப்பகுதியில் உள்ள கடைகளில், உரிமையாளர்களின் பெயர் எழுதி வைக்க உத்தரப் பிரதேச அரசு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளது. யாரையும் பெயர் பலகை கட்டாயம் வைத்திருக்க வேண்டும், என கட்டாயப்படுத்த கூடாது எனவும் உத்தரவிட்டது.

மேலும் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வெள்ளிக்கிழமைக்குள் பதில் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

Advertisement
Next Article