கன்னட நடிகர் #Dharshan-க்கு இடைக்கால ஜாமீன் - கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு!
கன்னட நடிகர் தர்ஷனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரேனுகாசாமி கொலை வழக்கை விசாரித்து வரும் போலீசார் நடிகர் தர்ஷன், அவரது தோழி பவித்ரா உட்பட 17 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடிகர் தர்ஷன் மீது அண்மையில் கர்நாடகா காவல்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், தர்ஷன் கடுமையான முதுகுவலியால் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு, பிசியோதரபி அல்லது அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. சிகிச்சை தாமதமானால் சிறுநீரக பிரச்னை உள்ளிட்ட பல்வேறு உடல்ரீதியிலான பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, முதுகு தண்டு அறுவை சிகிச்சைக்காக இடைக்கால ஜாமீன் கோரி கடந்த மாதம் அமர்வு நீதிமன்றத்தில் நடிகர் தர்ஷன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையும் படியுங்கள் : தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை – பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு முதலமைச்சர் #MKStalin மரியாதை!
இந்நிலையில், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடிகர் தர்ஷன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால ஜாமீன் மனு நேற்று விசாரித்து முடிக்கப்பட்டது. இதையடுத்து, இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி விஸ்வஜித் ஷெட்டி, தர்ஷனுக்கு 6 வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
பெங்களூருவில் சிறந்த மருத்துவர்கள் இருக்கும்பட்சத்தில், தர்ஷன் தரப்பினர் ஏன் மைசூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்புகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். மேலும், ஒரு வாரத்துக்குள் தர்ஷனின் மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யவும், சிகிச்சைக்கு எவ்வளவு காலம் தேவை? என்பதை குறிப்பிடவும் உத்தரவிட்டார். அதேபோல், தர்ஷனின் கடவுச் சீட்டை விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.