இந்தி திணிப்பு குறித்த பவன் கல்யாணின் பழைய பதிவுகளை பகிர்ந்து கனிமொழி எம்.பி. பதிலடி!
புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு எதிர்த்து வருகிறது. இது நாடு முழுவதும் அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.
இந்த சூழலில் நேற்று(மார்ச்.14) நடைபெற்ற ஜனசேனா கட்சியின் நிறுவன நாளில் அக்கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில துணை முதலமைச்சருமான பவன் கல்யாண், நாட்டின் ஒருமைபாட்டிற்கு தமிழ் உட்பட பல மொழிகள் தேவை என்றும் இந்தி வேண்டாம் என்றால், நிதி ஆதாயத்திற்காக ஏன் தமிழ் படங்களை இந்தியில் டப்பிங் செய்கிறார்கள்? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில் பவண் கல்யாணின் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மொழித் தடைகளைத் தாண்டி திரைப்படங்களைப் பார்க்க தொழில்நுட்பம் நம்மை அனுமதிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பாஜகவில் சேருவதற்கு முன்பு பவன் கல்யாண் இந்தி திணிப்பு குறித்து பேசிய பதிவுகளையும், தற்போது பேசியதையும் ஒப்பிட்டுள்ளார். பவன் கல்யாணின் பழைய பதிவில், “வட இந்திய அரசியல் தலைமை நமது நாட்டின் கலாச்சார பன்முகத்தன்மையைப் புரிந்துகொண்டு மதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.