Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கீழடி ஆய்வறிக்கை குறித்து கனிமொழி எம்பி நாடாளுமன்றத்தில் கேள்வி - மத்திய அமைச்சர் பதில்!

கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சி அறிக்கைகள் குறித்து திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி  எழுப்பிய கேள்விக்கு, மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் பதிலளித்துள்ளார்.
08:39 PM Feb 04, 2025 IST | Web Editor
Advertisement

கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சி அறிக்கைகள் எப்போது வெளியிடப்படும் என திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி எழுப்பிய  கேள்விக்கு, மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் பதிலளித்துள்ளார்.

Advertisement

“தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் மேற்கொள்ளப்பட்ட முதல் கட்ட, இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி அறிக்கைகள் எப்போது வெளியிடப்படும்; 2014 மற்றும் 2016க்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் அறிக்கைகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதற்கான காரணங்கள் என்ன

கடந்த பத்து ஆண்டுகளில் நாடு முழுவதும் மத்திய அரசு மேற்கொண்ட தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகளின் விவரங்கள் மற்றும் அத்தகைய அகழ்வாராய்ச்சிகளின் அறிக்கைகள் வெளியிடப்பட்ட தேதி ஆகிய விவரங்கள் தேவை”

என்று திமுக துணைப் பொதுச்செயலாளரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரான கனிமொழி கருணாநிதி எழுத்துபூர்வமாக கேள்விகள் கேட்டிருந்தார். இந்த கேள்விக்கு மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா அமைச்சர் கஜேந்திர சிங் ஷேகாவத் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில்,

“தொல் பொருட்களின் காலகட்டங்கள் மற்றும் பல்வேறு மிச்சங்களை கண்டுபிடிப்பதற்காக அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த அறிக்கைகளை உறுதிப்படுத்திட வெவ்வேறு ஆய்வகங்களில் விரிவான அறிவியல் ஆய்வு மற்றும் பகுப்பாய்வு தேவைப்படுகின்றன, இதற்கு பெரும்பாலும் நேரம் எடுக்கும்.

கீழடியில் 2014 முதல் 2016 வரை நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் குறித்த அறிக்கை 2023இல் சமர்ப்பிக்கப்பட்டது. அறிக்கையை வெளியிடுவதற்கு, நிபுணர்களால் முழுமையான பரிசோதனையை உள்ளடக்கிய உரிய செயல்முறை பின்பற்றப்பட்டு வருகிறது.

கடந்த பத்து ஆண்டுகளில் நாடு முழுவதும் இந்திய தொல்பொருள் ஆய்வு (ASI)   நிறுவனத்தின் பல்வேறு கள அலுவலகங்களால் 82 இடங்களில் அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்பட்டன. தமிழ்நாட்டில் 2015-16, 2016-17 களில் சிவகங்கை மாவட்டம் கீழடியிலும், 2017-18 இல் ஈரோடு மாவட்டம் கொடுமணலிலும்,2021-22 மற்றும் 2022-23 ஆகிய ஆண்டுகளில் தூத்துக்குடியில் உள்ள ஆதிச்சநல்லூரிலும், 2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆண்டில் காஞ்சிபுரம் மாவட்டம் வடக்கப்பட்டிலும், 2024-25 இல் செங்கல்பட்டு, கொடும்பலூர் ஆகிய இடங்களிலும் தொல்பொருள் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

சில அகழ்வாராய்ச்சிகள் விரிவான அளவில் மேற்கொள்ளப்படுவதால் அவை பல ஆண்டுகள் நீடிக்கும். அவற்றின் குறிப்பிட்ட  பருவத்தின் பணிகள் முடிந்தவுடன் அவ்வப்போது அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன.

சலுவன்குப்பம், சுபரேய், பர்சோஹோம், பைதான், கலிபங்கன், லலித்கிரி, தலேவன், ஆடம் மற்றும் ஹுலாஸ் ஆகிய இடங்களில்  மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் குறித்த இறுதி அறிக்கைகள் விரிவான ஆய்வு மற்றும் அறிவியல் பகுப்பாய்வு முடிக்கப்பட்டு  கடந்த பத்து ஆண்டுகளில் வெளியிடப்பட்டுள்ளன” என்று மத்திய அமைச்சர் பதிலளித்துள்ளார்.

Tags :
Gajendra Singh ShekhawatKanimozhiKeeladiMinister of CultureMinister of Tourism
Advertisement
Next Article