“#Kanguva திரைப்படத்தை இந்தியில் 3500 திரையரங்குகளில் வெளியிட திட்டம்” - தயாரிப்பாளர் தகவல்!
கங்குவா திரைப்படத்தை இந்தியில் மட்டும் சுமார் 3500 திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதையடுத்து, கங்குவா திரைப்படத்தை தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
‘கங்குவா’ திரைப்படம் 10 மொழிகளில் வெளியாக உள்ள நிலையில் படப்பிடிப்பு நிறைவடைந்தது. கங்குவா திரைப்படம் நவ. 14-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அறிவித்தது. எனவே, இறுதிகட்ட பணிகளை படக்குழு தீவிரமாக மேற்கொண்டுள்ளது. இதையடுத்து, இந்த திரைப்படம் 3டி முறையில் வெளியாக உள்ள நிலையில், 3டி பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது.
இப்படத்தின் பிறமொழி டப்பிங்கிலும் சூர்யாவின் குரலே ஏஐ மூலம் பயன்படுத்தப்பட்டிருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக, தமிழ் நடிகர்களின் படங்கள் பிறமொழிகளில் வெளியாகும்போது அம்மொழி தெரிந்த டப்பிங் கலைஞர்கள் குரல் கொடுப்பார்கள். தற்போது, ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் ஒருவரின் குரலை அசலாக இன்னொரு மொழிக்கு டப்பிங் செய்ய முடிகிறது. இதனால், கங்குவா படக்குழு சூர்யாவின் குரலே மற்ற மொழிகளிலும் இருக்கட்டும் என முடிவு செய்து அதை சாத்தியப்படுத்தியுள்ளனர்.
இதனிடையே, எக்ஸ் தளத்தில் சூர்யா ரசிகர்களுடன் ‘கங்குவா’ தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கலந்துரையாடினார். அதில் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, “வரும் நாட்களில் தினமும் அப்டேட் இருக்கும். தமிழ்நாடு தவிர இதர மாநிலங்களில் காலை 4 மணி காட்சி இருக்கும். விரைவில் வரவுள்ள ட்ரெய்லரில் தற்கால காட்சிகள் இடம்பெறும். 3டி யில் படம் தயாராகி வருகிறது. அதன் மாற்றத்தில் ஒரே ஒரு பாடல் மட்டுமே பாக்கி இருக்கிறது. ஐமேக்ஸ் திரையரங்கில் ‘கங்குவா’ வெளியீடு இருக்காது. இந்தியில் மட்டுமே சுமார் 3500 திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டு வருகிறோம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.