கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் எதிரொலி! அமலாக்கப்பிரிவு ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 41 பேர் பலியான நிலையில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால், சென்னை அமலாக்கப்பிரிவு எஸ்பி ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து 41 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் 60க்கும் மேற்பட்டவர்கள் உயிருக்கு போராடி வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்
இந்நிலையில் தான் தமிழக அரசு அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விஷச்சாராய விற்பனையை தடுக்க தவறியவர்கள் மீது அதிரடியாக நடவடிக்கைகள் பாய்ந்து வருகிறது. குறிப்பாக அமலாக்கப்பிரிவு மற்றும் மதுவிலக்கு போலீஸ் பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது தமிழக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால் காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எந்த பதவிகளும் வழங்கப்படவில்லை. அதேவேளையில் மகேஷ் குமார் அகர்வாலுக்கு பதில் சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி அருணுக்கு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர சென்னை கீழ்பாக்கம் துணை காவல் ஆணையர் கோபி சென்னை அமலாக்கப்பிரிவு எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். அதேபோல் சென்னை அமலாக்கப்பிரிவு எஸ்பி செந்தில் குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு சார்பில் முதன்மை செயலாளர் அமுதா பிறப்பித்துள்ளார். விஷச்சாராய மரணம் தொடர்பான இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்றைய தினம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஷ்ரவன் குமாருக்கு பதிலாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக எம்எஸ் பிரசாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கள்ளக்குறிச்சி எஸ்பி சமய்சிங் மீனா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். விஷச்சாராயம் விற்பனையை தடுக்க தவறியதாக கூறி அவர் மீது இந்த நடவடிக்கையை அரசு எடுத்தது. அதோடு சமய் சிங் மீனாவுக்கு பதிலாக புதிய எஸ்பியாக ரஜத் சதுர்வேதி நியமிக்கப்பட்டார். தற்போது கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக எம்எஸ் பிரசாந்தும், எஸ்பியாக ரஜத் சதுர்வேதியும் உடனடியாக பொறுப்பேற்று செயல்பட்டு வருகின்றனர். இதுதவிர கள்ளக்குறிச்சியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு அதிகாரிகள் கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.