கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் - ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 16 பேரின் நிலைமை கவலைக்கிடம்!
கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தில் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 16பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக ஜிப்மர் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் அருந்தியதில் இதுவரை 41 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்திற்கு எதிர்க் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு உள்ளிட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தனர். மேலும் உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்.
” ஜிப்மர் மருத்துவமனையில் ஜூன் 19, 2024 அன்று விஷச்சாராயம் அருந்திய 19 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மீதமுள்ள அனைவரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். 10 நோயாளிகளுக்கு மூச்சு சம்பந்தப்பட்ட சிரமம் இருந்ததால் அவர்களுக்கு வெண்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டு, உயர்தர உயிர்காக்கும் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.