கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் - பெண்கள் உயிரிழந்த நிலையில் குஷ்பு தலைமையில் விசாரணைக் குழு அமைப்பு!
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் பெண்கள் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்த பாஜக நிர்வாகியும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 6 பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 150க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மட்டும் 20 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 20க்கும் மேற்பட்டோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த மரணம் தொடர்பாக தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இந்தசூழலில் கள்ளச்சாராயம் குடித்து பெண்கள் உயிரிழந்த விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையமும் கையில் ஏடுத்துள்ளது. ஊடகங்களில் வெளியான செய்தி அடிப்படையில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த உள்ளது.
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை தேசிய மகளிர் ஆணையம் அமைத்துள்ளது. இந்நிலையில் விரைவில் குஷ்பு கள்ளக்குறிச்சி விரையவுள்ளார் என தகவல்கள் வருகின்றன.