வெளியான 4 நாட்களில் ரூ.555 கோடி வசூலித்த ‘கல்கி 2898 AD’
‘கல்கி 2898 AD’ திரைப்படம் வெளியான 4 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.555 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கல்கி திரைப்படம், கடந்த வாரம் 27ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகேன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சுமார் 500 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கல்கி, இரண்டு பாகங்களாக வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, தற்போது கல்கி முதல் பாகம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மகாபாரதம், சயின்ஸ் பிக்ஷன் பின்னணியில் உருவாகினால் எப்படி இருக்குமோ அது தான் கல்கி திரைப்படம் என ரசிகர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர். அதேபோல், சினிமோட்டோகிராபி, கிராபிக்ஸ் என டெக்னிக்கலாக மேக்கிங்கில் மிரட்டியுள்ளது கல்கி எனவும் விமர்சனங்கள் வந்தன. இருப்பினும் திரைக்கதை எதிர்பார்த்தளவு சிறப்பாக அமையவில்லை என்றும், பிரம்மாண்டத்தை மட்டுமே நம்பி இப்படத்தை எடுத்துள்ளதாகவும் ரசிகர்கள் கூறினர். இன்னொரு பக்கம் இந்திய சினிமாவில் ஹாலிவுட் தரத்திலான ஒரு படம் என்றால் அது கல்கி தான் எனவும் பாராட்டினர்.
இந்நிலையில், முதல் நாளிலேயே 191 கோடி ரூபாய் வசூலித்து மாஸ் காட்டியிருந்தது கல்கி 2898 ஏடி. பிரபாஸ், கமல், அமிதாப் பச்சன், பிரம்மாண்டமான மேக்கிங் என படத்துக்கு பெரிய ஹைப் இருந்ததால், முதல் நாளில் 200 கோடி வரை வசூலிக்கும் என எதிர்பார்ப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது நாளில் கலெக்ஷன் குறைந்தாலும், பாக்ஸ் ஆபிஸில் கல்கி சாதனை படைத்துக்கொண்டே வந்தது. வியாழன், வெள்ளி, வார இறுதியில் சனி, ஞாயிறு ஆகிய நாட்களிலும் கல்கி படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது. இதனால் முதல் வாரத்தின் முடிவில் உலகம் முழுவதும் 555 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் 20 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ள கல்கி, மற்ற மொழிகளிலும் கோடிகளை குவித்துள்ளது. தெலுங்கில் மட்டும் 300 கோடிக்கும் அதிகமாக கலெக்ஷன் செய்துள்ளதாக டோலிவுட் பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் வட அமெரிக்காவில் 4 நாட்களில் 92 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இனிவரும் நாட்களிலும் கல்கி கலெக்ஷன் அதிகரிக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஆயிரம் கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் கல்கி கண்டிப்பாக இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.