#KalaignarKarunanidhi மாநில உரிமைகளுக்கு போராடியவர் ; வேற்றுமையில் ஒற்றுமையை காத்தவர் - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மாநில உரிமைகளுக்காக தொடர்ந்து போராடியவர், வேற்றுமையில் ஒற்றுமையை பேணிக் காத்தவர் என மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
கலைஞர் நூற்றாண்டையொட்டி மத்திய அரசு சாா்பில் அவரின் உருவம் பொறித்த ரூ.100 நாணயத்தை இன்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிடும் நிகழ்வு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
இதன் பின்னர் கலைஞர் நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழா சென்னை கலைவாணா் தொடங்கியது. இந்த விழாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் முன்னிலை வகித்தார்.
இந்த விழா மேடையில் பேசிய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்ததாவது..
“ பல தேசியத் தலைவர்களுடன் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நெருக்கமான உறவுகளை கொண்டிருந்தார். அப்படி நல்ல நட்புறவு இருந்தும் அவருடைய அரசியல் கொள்கைகளில் எந்த விதமான மாற்றங்களையும் அவர் ஏற்படுத்தவில்லை
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஒரு மாநிலத்தின் தலைவர் மட்டுமல்லாமல் தேசம் முழுவதும் போற்றப்படுபவராக திகழ்ந்தார். அவர் முன்வைத்த ஜனநாயக கூறுகள், இந்திய ஜனநாயகத்தின் செயல்பாடுகளில் மிகப்பெரிய தாக்கம் அளித்துள்ளது.
வரலாற்றில் அழிக்க முடியாத பல சாதனைகளை அவர் புரிந்துள்ளார். நாட்டின் கலாசாரம் மற்றும் சமூகநீதியின் அடையாளமாக கருணாநிதி திகழ்கிறார். அவரது பொதுநல தொண்டால் நாட்டிற்கே நன்மை ஏற்பட்டுள்ளது. மாநில உரிமைகளுக்காக தொடர்ந்து அவர் போராடியவர் . வேற்றுமையில் ஒற்றுமை பேணிக் காத்தவர்” என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார்.