திருக்குறுங்குடியில் கைசிக ஏகாதசி திருவிழா! - ஏராளமான பக்தர்கள் தரிசனம்
திருக்குறுங்குடியில் உள்ள ஸ்ரீ அழகிய நம்பிராயர் திருக்கோயிலில் நடைபெற்ற கைசிக ஏகாதசி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
நெல்லை மாவட்டம், திருக்குறுங்குடியில் ஸ்ரீஅழகிய நம்பிராயர் திருக்கோயில் உள்ளது. இந்த திருகோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாத கைசிக ஏகாதசி விழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் திருக்கோயிலின் சிறப்பு வாய்ந்த கைசிக ஏகாதசி திருவிழா நவம்பர் 23 ஆம் தேதி (நேற்று) இரவு ஜீயா் சுவாமிகள் அனுக்கிரஹத்துடன் வெகு சிறப்பாக நடைபெற்றது.
அதனை தொடர்ந்து, விழாவையொட்டி அழகிய நம்பிராயருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. மேலும், இரவில் தங்க தோளுக்கினான் பல்லக்கில்
ஸ்ரீ அழகிய நம்பி தன் தேவியருடன் மூலஸ்தானத்திலிருந்து மங்கல வாத்தியங்கள்
முழங்க திருக்குறுங்குடி ராமானுஜ ஜீயா் சுவாமிகள் தலைமையில் வைணவ பெரியவர்கள் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் திருமடல் பாடல்கள் பாடியபடிவர கௌசிக மண்டபத்திற்கு எழுந்தருளினார்.
தொடா்ந்து, இராமானுஜ ஜீயா் சுவாமிகளுக்கு ராஜ மரியாதை செய்யப்பட்டது. இரவில் பெருமாள் முன் அரையா் கௌசிக புராணத்தை வாசிக்கும் நிகழ்வு நடைபெற்றது. நிறைவாக திருக்கோயில் வளாகத்தில் கௌசிக புராண நாடகம், ஆன்மீக உபன்யாசங்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் பள்ளி மாணவ-மாணவியரால் நடைபெற்றன. தொடர்ந்து, இந்த கலை நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான பக்தா்கள் கண்டு மகிழ்ந்தனா்.