’நீதி வெல்லும்’ - தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவு..!
கரூரில் கடந்த 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தவெக நிர்வாகிகள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரை கைது செய்தனர்.
இச்சம்பவம் குறித்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தமிழக வெற்றிக்கழகம் எதிர்ப்பு தெரிவித்தது. கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில் கரூர் கூட்டநெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ’நீதி வெல்லும்’ என்று பதிவிட்டுள்ளார்.