#JuniorAsiaCupHockey | இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்!
ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
21 வயதுக்கு உட்பட்டோருக்கான 10வது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் கடந்த நவ.26ம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்ற 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டன. அதன்படி, ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, தென் கொரியா, ஜப்பான், சீனதைபே, தாய்லாந்தும், ‘பி’ பிரிவில் பாகிஸ்தான், மலேசியா, வங்காளதேசம், ஓமன், சீனாவும் இடம் பிடித்திருந்தன. இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதியது.
லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன. அதன்படி, நேற்று (டிச.3) நடைபெற்ற அரையிறுதி ஆட்டங்களில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவையும், பாகிஸ்தான் அணி 4-2 என்ற கோல் கணக்கில் ஜப்பானையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்த நிலையில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான இறுதிப்போட்டி இன்று இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது.
கடந்த ஆண்டு இதன் இறுதி ஆட்டத்தில் இந்தியாவிடம் தோற்ற பாகிஸ்தான் இந்த முறை வெற்றி பெறும் நோக்கத்தில் ஆடும். அதேபோல், இந்திய அணி மீண்டும் சாம்பியன் ஆகும் முனைப்பில் விளையாடும். இதனால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. முன்னதாக 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஜப்பான்- மலேசியா அணிகள் மோத உள்ளன.