Junior Women’s hockey Asia Cup | சீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி!
மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் சீனாவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
21 வயதுக்கு உட்பட்டோருக்கான 9வது மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்று வந்தது. இதில் நேற்று முன்தினம் (டிச.14) மாலை நடந்த முதலாவது அரையிறுதியில் இந்திய அணி, ஜப்பானை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இதேபோல் நடைந்த மற்றொரு அரையிறுதி போட்டியில் சீனா-தென்கொரியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் சீன அணி 4-1 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இறுதிப்போட்டியில் வெல்லப்போவது யார்? என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கியின் இறுதிப்போட்டி நேற்று (டிச.15) இரவு 8.30 மணிக்கு தொடங்கியது. இதில், இந்தியா - சீனா அணிகள் மோதிக்கொண்டன. பரபரப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் ஆட்ட நேர முடிவில் தலா ஒரு கோல் அடித்தன. இதனால் ஆட்டம் சமனில் இருந்தது. இதையடுத்து, ஷூட் அவுட் முறை கொண்டு வரப்பட்டது. இதில் இந்திய அணி 4-2 என்ற கணக்கில் சீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.