மாஸ் காட்டும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்!... மீண்டும் கார்த்திக் சுப்புராஜுடன் இணையும் லாரன்ஸ்?...
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வெற்றியை தொடர்ந்து மீண்டும் கார்த்திக் சுப்பராஜுடன் நடிகர் ராகவா லாரன்ஸ் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘ஜிகர்தண்டா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. தீபாவளியை முன்னிட்டு வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
படம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வருவதாலும், ஜப்பான் படத்தின் கடும் தோல்வியால் இப்படத்தின் முதல்நாள் வசூலை விட அடுத்தடுத்த நாள்களின் வசூல் அதிகரித்தன. தொடர்ந்து இப்படம் வெளியான 4 நாள்களில் உலகளவில் ரூ.35 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில் இந்த படத்தின் சக்ஸஸ் மீட்டில் கலந்துகொண்ட ராகவா லாரன்ஸ் “எனக்கு இவ்வளவு பெரிய வெற்றியைக் கொடுத்த கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பென்ச் நிறுவனத்துக்கு நான் மீண்டும் கால்ஷீட் தருகிறேன். அந்த படத்தை அவர் இயக்கினாலும் இல்லை வேறு யாரோ இயக்கினாலும் நான் நடிக்க தயார்” எனக் கூறியுள்ளார்.