#Jharkhand சட்டப்பேரவைத் தேர்தல் | முதற்கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்புமனு தாக்கல் தொடக்கம்!
ஜார்க்கண்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்கியுள்ளது.
81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப் பேரவைக்கு நவம்பர் 13 மற்றும் 20-ம் தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நவ.23ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த நிலையில் நவம்பர் 13ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 43 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. இத் தொகுதிகளில் வரும் 25-ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணிக்குள் ஏற்றுக்கொள்ளப்படும்.
வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர் உள்பட 5 பேர் மட்டுமே தேர்தல் அதிகாரியின் அறைக்குள் செல்ல வேண்டும். பொது வேட்பாளர்கள் ரூ.10 ஆயிரமும், எஸ்சி/எஸ்டி வேட்பாளர்கள் ரூ.5 ஆயிரமும் வைப்புத்தொகை செலுத்த வேண்டும். ஒவ்வொரு வேட்பாளரும் அதிகபட்சமாக ரூ.40 லட்சம் வரை செலவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 28ஆம் தேதி நடைபெறும் எனவும், வேட்புமனுவைத் திரும்பப் பெற அக்டோபர் 30ஆம் தேதி கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.