தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது | மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் நாளை வாக்குப்பதிவு!
மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நாளை தேர்தல் நடைபெறுகிறது.
மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகவும், ஜார்க்கண்டில் 2ம் கட்டமாக 38 தொகுதிகளிலும் நாளை (நவ-20ம் தேதி) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் 26ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், மகாராஷ்டிராவில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் அணி), தேசியவாத காங்கிரஸ்(சரத் பவார் அணி) ஆகியவை உள்ளடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
மகாயுதி கூட்டணியில் பாஜக 149 இடங்களிலும், சிவ சேனா (ஷிண்டே அணி) 81 இடங்களிலும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 59 இடங்களிலும் போட்டியிடுகின்றன. மகா விகாஸ் அகாடி கூட்டணியில், காங்கிரஸ் 101 இடங்களில் போட்டியிடுகிறது. சிவசேனா உத்தவ் அணி 95 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவார்) கட்சி 86 இடங்களிலும் போட்டியிடுகிறது.
இதையும் படியுங்கள் : மாநகரப் பேருந்துகளில் 20 கிலோ எடை வரையிலான பொருள்களை கட்டணமின்றி எடுத்துச் செல்ல அனுமதி!
மகாயுதி கூட்டணியின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மகாராஷ்டிராவில் முகாமிட்டு பிரசாரம் செய்தனர். அதேபோல், மகாவிகாஸ் அகாடி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் தீவிர பிரசாரம் செய்தனர். இந்நிலையில், நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நேற்று மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்தது. இதையடுத்து, மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடக்கிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தமாக உள்ள 81 தொகுதிகளிக்கு 2 கட்டங்களாக சட்டப் பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, 43 தொகுதிகளில் கடந்த 13ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. மீதமுள்ள தொகுதிகளில் இரண்டாம் கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது. ஜார்கண்ட்டில் காங்கிரஸ் கட்சி 30 இடங்களிலும், ஜேஎம்எம் 42 இடங்களிலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் 6 இடங்களிலும் போட்டியிடுகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வரும் 23-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.