Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

15 ஆண்டுகளாக குறைந்து வரும் மக்கள்தொகையால் சோகத்தில் வாடும் ஜப்பான்!

03:19 PM Jul 26, 2024 IST | Web Editor
Advertisement

கடந்த 15 ஆண்டுகளாக ஜப்பானின் மக்கள்தொகை வெகுவாக குறைந்து வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

Advertisement

உலகின் 4வது பெரிய பொருளாதார நாடு என்றால் அது ஜப்பான்தான். இரண்டு அணுகுண்டு தாக்குதலுக்கு பின் ஒரு நாடு முன்னேறி இவ்வளவு பெரிய இடத்தில் இருக்குமா? என்ற கேள்விக்கு பதிலாக ஜப்பான் உள்ளது. பெருமைகள் பல இருந்தாலும் சோகமும் ஜப்பானை சூழ்ந்துள்ளது. அப்படி என்ன சோகம் என்று நாம் கேட்கலாம். இவ்வளவு  பெரிய பொருளாதார நாட்டில் 15 வருடங்களாக ஒரு பிரச்னை தொடர்ந்து கொண்டே வருகிறது. அது வேறொன்றும் இல்லை, மக்கள் தொகைதான்.

கடந்த 15 ஆண்டுகளாக ஜப்பானின் மக்கள்தொகை வெகுவாக குறைந்துள்ளதாக கடந்த புதன்கிழமையன்று அந்நாட்டு அரசு கூறியுள்ளது. ஜப்பான் நாட்டின் மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் முதியவர்களாக மாறி வரும் அதேநேரத்தில் அந்நாட்டில் பிறப்பு விகிதம் குறைவாக இருக்கும் காரணத்தால், ஜப்பான் மக்கள் தொகை கடந்த ஆண்டை காட்டிலும் 5 லட்சத்துக்கும் அதிகமாகக் குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு ஜப்பானில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 7,30,000 ஆக சரிந்தது. இது வரலாற்றுச் சரிவாகும். இதேபோல் கடந்த ஆண்டு 15.8 லட்சம் பேர் இறந்துள்ளனர். இதுவும் வரலாற்றில் அதிகமாகும். ஜனவரி 1 நிலவரப்படி ஜப்பானின் மக்கள் தொகை 124.9 மில்லியனாக உள்ளது. மக்கள் தொகை குறைவது என்பது ஜப்பான் போன்ற பெரிய பொருளாதார நாடுகளுக்கு மிகப்பெரிய பிரச்சனை.

ஜப்பான் நாட்டின் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, வெளிநாட்டிலிருந்து குடியேறிய மக்களின் எண்ணிக்கை 11% அதிகரித்துள்ளதால், இப்பிரிவின் மக்கள் தொகை முதல் முறையாக 3 மில்லியனைத் தாண்டியுள்ளது. இதன் மூலம் ஜப்பானில் மொத்த மக்கள் தொகையில் வெளிநாட்டவர்கள் கிட்டத்தட்ட 3% ஆக உள்ளனர் மற்றும் பெரும்பாலும் 15 முதல் 64 வயது வரையிலான வேலை வாய்ப்புள்ளவர்களாக உள்ளனர்.

அங்கு குழந்தை பிறப்பு விகிதமும் மிக குறைவாக உள்ளது. இதற்கு அங்குள்ள இளைஞர்களுக்கு திருமணத்தில் நாட்டம் இல்லாததே காரணம் எனக் கூறப்படுகிறது. சராசரி மனிதனின் வாழ்க்கையில் சம்பாதிக்கும் பணத்தில் 60% திருமண வாழ்க்கைக்காகவே செலவழிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி, ஜப்பான் ஆணாதிக்கம் செலுத்தும் சமூகமாக இருந்து வருவதாகவும், அதனால் பெண்கள் திருமண வாழ்க்கையை புறக்கணிப்பதாகவும் கூறுகின்றனர்.

மேலும், பெண்கள் வேலைக்குச் சென்று, சுயமாக முன்னேறி வருவதால், அவர்களுக்கு திருமண வாழ்க்கையில் கவனம் செலுத்தவதில்லை என்றும் தெரிய வந்துள்ளது. இந்த சூழ்நிலை தொடர்ந்தால் 2070 ஆம் ஆண்டளவில் ஜப்பானின் மக்கள் தொகை சுமார் 30% குறைந்து 87 மில்லியனாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது 10 பேரில் நான்கு பேர் 65 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களாக இருப்பார்கள் என ஆய்வுகள் கூறுகிறது.

Tags :
Birth RateJapanpopulationyoungsters
Advertisement
Next Article