சென்னை நேரு விளையாட்டரங்கில் ஜப்பான் திரைப்பட இசை வெளியீட்டு விழா - முக்கிய நடிகர்களை அழைக்க ஏற்பாடு!
சென்னை ரு விளையாட்டரங்கில் ஜப்பான் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ள நிலையில் முக்கிய நடிகர்களை அழைக்க திட்டமிட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.
ஜப்பான் படம் தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அவர் தெரிவித்ததாவது..
நடிகர் கார்த்தியின் 25வது படமாக ஜப்பான் திரைக்கு வர தயாராக உள்ளது. ஜப்பான் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா அக்டோபர் 28-ம் தேதி சனிக்கிழமை சென்னையில் உள்ள நேரு விளையாட்டரங்கத்தில் நடைபெறுகிறது. இப்படம் கார்த்திக்கு 25வது படம் என்பதால் இதுவரை அவருடன் படங்களில் பணியாற்றியவர்களை அழைக்க திட்டமிட்டுள்ளோம்.
சென்னை நேரு ஸ்டேடியத்தில் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை நடத்த முறையான அனுமதி பெற்றுள்ளோம். நேரு ஸ்டேடியத்தில் எவ்வளவு நபர்களை அனுமதிக்க முடியுமோ அந்த அளவுக்கு தான் விருந்தினர்களை அழைக்க உள்ளோம். மொத்தமாக 7,000 நபர்கள் அனுமதிக்கலாம். இதை தாண்டி யாரையும் அழைக்க ஏற்பாடு செய்யவில்லை. மேலும், காவல் துறை தரப்பிலும் முழு ஒத்துழைப்பும் பாதுகாப்பும் தர உள்ளதாகவும் தெரிவித்தனர். டிக்கெட் இருந்தால் மட்டுமே அனுமதிப்போம்.
நகைச்சுவை மிக்க படம் தான் ஜப்பான். இதில் அரசியல் தொடர்பான கருத்துக்கள் ஏதுவும் இல்லை என்பதால் சென்சார் செய்யும் போது காட்சிகள் நீக்கம் போன்று பிரச்னைகள் இருக்காது. மக்களுக்கு எதை கொண்டு போய் சேர்க்கனுமோ அதை சரியாக செய்திருப்பதால் பிரச்னை கண்டிபாக வராது என நம்புகிறேன். அது போலவே முகம்சுளிக்க வைக்கும் வன்முறை இந்த படத்தில் இருக்காது. சித்தா, குட் நைட், டாடா உள்ளிட்ட படங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது போல் இந்த படமும் நல்ல வரவேற்பை பெறும்.
இவ்வாறு தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கூறினார்.