#JammuKashmirElection2024: #JKNC-யின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு - கந்தர்பால் தொகுதியில் உமர் அப்துல்லா போட்டி!
ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி சார்பில் அந்த மாநில முன்னாள் முதலமைச்சரும், கட்சியின் துணைத் தலைவருமான உமர் அப்துல்லா கந்தர்பால் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் அதன் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, தற்போது சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 90 சட்டசபை தொகுதிகளை கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.
முதல் கட்ட தேர்தல் செப்.18-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் வேட்பு மனு தாக்கல் ஆக.20-ம் தேதி தொடங்கியது. வேட்புமனுவை தாக்கல் செய்ய கடைசி நாள் நாளையுடன் (ஆக.28) நிறைவடையும் நிலையில் ஆக.30-ம் தேதி வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும். தொடர்ந்து 2ம் கட்ட தேர்தல் செப். 25-ம் தேதி மற்றும் 3ம் கட்ட தேர்தலின் வாக்குப்பதிவு அக். 1-ம் தேதி நடக்கிறது. மூன்று கட்டங்களில் பதிவாகும் வாக்குகள் அக். 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே வெளியாகின்றன.
இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1 இடத்திலும், பாந்தர்ஸ் கட்சி 1 இடத்திலும் போட்டியிடுகின்றன. இந்நிலையில், தேசிய மாநாட்டுக் கட்சி சார்பில் போட்டியிடும் முதல் 32 வேட்பாளர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கந்தர்பால் தொகுதியில் முன்னாள் முதலமைச்சரும் கட்சியின் துணைத் தலைவருமான உமர் அப்துல்லாவும், ஜாதிபாலை தொகுதியில் கட்சியின் மூத்த தலைவர் தன்வீர் சாதிக்கும் போட்டியிடுகின்றனர்.