#JammuKashmir தேர்தல் - செப். 14ல் பிரதமர் மோடி பிரசாரம்!
ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி செப்.14ம் தேதி ஜம்முவில் பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, தற்போது சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 90 சட்டசபை தொகுதிகளை கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் உள்ள முக்கியக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு ஆக. 26ம் தேதி நிறைவு பெற்றது. அதன்படி, இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேசிய மாநாட்டுக் கட்சி 51 இடங்களிலும், காங்கிரஸ் 32 இடங்களிலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.
இந்த நிலையில் பா.ஜ.க. தனித்து போட்டியிட உள்ள நிலையில் 51 தொகுதிகளுக்கு அந்த கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது. பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது. அதன்படி வருகிற 14-ந்தேதி அவர் ஜம்முவில் பிரசாரம் செய்வார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதேபோல பிரதமர் மோடி 2 பொதுக் கூட்டங்களில் பேசுகிறார். ஜம்மு பகுதியில் மோடியின் பிரசாரம் பா.ஜ.க.வுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தும் என்று அந்த கட்சி நம்புகிறது. பா.ஜ.க.வில் தேர்தல் அறிக்கை வெளியிட்ட பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று முன்தினமும், நேற்றும் ஜம்முவில் பிரசாரம் செய்து ஆதரவு திரட்டினார். இந்த நிலையில் பிரசாரத்தை பலப்படுத்த பிரதமர் மோடி பிரசாரம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.