ஜம்மு காஷ்மீர் நிலச்சரிவு - பலி எண்ணிக்கை 60 ஆக உயர்வு!
ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் மேக வெடிப்பு காரணமாக பெய்த கனமழையால் நேற்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோா் எண்ணிக்கை 60-ஆக உயா்ந்துள்ளது. கிஷ்த்வாா் மாவட்டத்தில் 9,500 அடி உயரத்தில் மச்சயில் மாதா கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு செல்ல சோசிடி என்னும் கிராமம் வரையே வாகனங்களில் சென்று அங்கிருந்து 8.5 கிலோமீட்டா் நடந்து செல்ல வேண்டும். தற்போது இந்த மச்சயில் மாதா கோயிலில் வருடாந்திர யாத்திரை நடைபெற்றுவருகிறது. இதனால் சோசிடி கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை ஏராளமான பக்தா்கள் குவிந்திருந்தனா்.
இந்த நிலையில் அங்கு மேகவெடிப்பு ஏற்பட்டு, கனமழை கொட்டியது. கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதனைத் தொடா்ந்து, காவல் துறை இராணுவம், தன்னார்வலர்கள ஆகியோர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனா். தற்போது இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோா் எண்ணிக்கை 60-ஆக உயா்ந்துள்ளது. 100-க்கும் மேற்பட்டோா் காயமடைந்துள்ளனர். மேலும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மாயமான 69 பேரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
கிஷ்த்வாரில் இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்ட சோசிடி கிராமத்தை முதல்வா் ஒமா் அப்துல்லா வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். மேலும் பிரதமர்மோடி ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா, முதல்வா் ஒமா் அப்துல்லா ஆகியோருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கள நிலவரத்தைக் கேட்டறிந்தாா்.