ஜம்மு காஷ்மீர் மேகவெடிப்பு - பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 7 பேர் பலி!
ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் இன்று அதிகாலை மேக வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால ஜோத் காட்டி பகுதில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். அதேபோல ஜங்லோட் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த சம்பவங்களால் 6 பேர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில் கதுவா மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
”மாவட்டம் முழுவதும் "கனமழை முதல் மிக கனமழை" பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் ஆறுகள், ஓடைகள், மற்றும் பிற நீர்நிலைகளுக்கு அருகில் செல்வதையும், மேலும் மலைப்பாங்கான பகுதிகள் மற்றும் பிற ஆபத்து நிறைந்த பகுதிகளுக்கு செல்வதையும் தவிர்க்க வேண்டும் என கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்ததுள்ள ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா பாதிக்கபட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்தநிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எக்ஸ் தள பதிவில் ”ஜம்மு காஷ்மீர் கதுவா மேக வெடிப்பு பெருவெள்ளம் குறித்த நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். ஜம்மு காஷ்மீர் சகோதர சகோதரிகளுடன் நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம்” என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக ஆகஸ்ட் 14 அன்று ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாரில் மேக வெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 60 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.