ஜல்லிக்கட்டில் வெல்வோருக்கு பரிசாக சொகுசு காருக்கு பதில் டிராக்டர் வழங்க வேண்டும்! - அன்புமணி ராமதாஸ்
ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்களுக்கு பரிசாக சொகுசு காருக்கு பதிலாக
டிராக்டரை பரிசாக அரசு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் வாக்குச்சாவடி செயல் வீரர்கள் கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:
காவிரி உபநிர் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் ஆன்லைன்
சூதாட்டத்தை தடை செய்தும் உயிர் பலி தொடர்கிறது. மூத்த வழக்கறிஞர்களை கொண்டு
முறையீடு செய்யவேண்டும். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன
என்பதே தெரியவில்லை. ஸ்டெர்லைட் ஆலையை எக்காரணத்தை கொண்டும் திறக்க கூடாது. இதனால் இரண்டு லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள்.
ஜல்லிக்கட்டில் அரசு பரிசு அறிவிக்கிறது, காரை வைத்து விவசாயியால் என்ன
செய்ய முடியும். அதற்கு பதிலாக டிராக்டர் வாங்கி கொடுங்கள். விவசாயம் சார்ந்த
பரிசு பொருட்களை கொடுங்கள். அதன் மூலம் வருமானம் கிடைக்கும். ஜல்லிக்கட்டை
திட்டமிட்டு பாதுகாப்பு ஏற்பாட்டுடன் நடத்திட வேண்டும்.
பாலக்கோடு பகுதியில் தக்காளி விளைச்சல் அதிகம் உள்ளது. குளிர்பதன கிடங்கு
அமைத்திடவும், பதப்படுத்தவும், மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்கவும் திட்டங்களை
கொண்டு வரவேண்டும். ஒரு மாநிலத்தின் வளர்ச்சிகாக தொழில் முதலீடுகள், தொழிற்சாலைகள் வரவேண்டும். அப்போது வேலைவாய்ப்புகள் கிடைக்கும். கடந்த காலங்களில் உலக முதலீடுகள் எவ்வளவு வந்தது மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது என்பதை தெளிவுபடுத்த வேண்டும். தொழில் முதலீடுகளை வரேவற்கிறோம்.
தொப்பூர் கணவாய் பகுதி உயர்மட்ட மேம்பாலம் என்பதை யாரும் சொந்தம்
கொண்டாடப்போவதில்லை, நாங்கள் ஒன்றும் ட்விட்டர் அரசியல் செய்யப்போவதில்லை.
காரிமங்கலத்தில் மது அருந்திய இளைஞர்கள் சிலர் தட்டிகேட்ட விவசாயியை கொலை
செய்திருக்கின்றனர். உயரிழிந்திருக்கின்ற விவசாயி குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய்
இழப்பீடு வழங்க வேண்டும். அரசு தான் இதற்கு பொறுப்பு.
வாணியாறு உபரி நீர் திட்டம், பஞ்சப்பள்ளி உபரி நீர் திட்டம், சேனக்கல் உபரி
நீர் திட்டம், தொப்பையாறு அணை உபநீர் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை
நிறைவேற்றவேண்டும் இதனால் தருமபுரி மாவட்ட விவசாயிகள் பயன்பெறுவார்கள், இதை விட்டுவிட்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தினால் மட்டுமே போதாது.
இவ்வாறு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.