மதுரை கீழக்கரையில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு | பிற்பகல் 12 மணிக்கு நிறைவடையும் முன்பதிவு
மதுரை மாவட்டம் கீழக்கரையில் நடைபெற உள்ள முதல் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கீழக்கரையில் பெரும் பொருட்செலவில், தமிழக அரசு சார்பில் பிரமாண்டமாக ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டுள்ளது. இதனை வரும் 24ம் தேதியன்று முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். அதைதொடர்ந்து அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க உள்ள காளை மற்றும் காளையர்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
கீழக்கரையில் 66.8 ஏக்கரில் 4,500 பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையில் ரூ.44 கோடியில் மூன்று தளங்களுடன் பிரமாண்ட மைதானம் உலக தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் அமர பாதுகாப்பான கேலரிகள் ஹைடெக் வடிவில் அமைக்கப்பட்டுள்ளன.
தரைத்தளத்தில் வாடிவாசல், நிர்வாக அலுவலகம், மாடுபிடி வீரர்களுக்கான இடம், காளைகள் பரிசோதனைக் கூடம், முதலுதவிக் கூடம், பத்திரிகையாளர் கூடம், காளைகள் பதிவு செய்யும் இடம், அருங்காட்சியகம், தற்காலிக விற்பனைக் கூடம், பொருட்கள் பாதுகாப்புப் பெட்டகம், தங்கும் அறைகள் உள்ளன. 16,921 சதுர அடியில் அமைக்கப்படும் முதல் தளத்தில் விஐபிகள் அமரும் அறை மற்றும் அவர்கள் தங்கும் அறைகள், உணவு வைப்பு அறைகள் இடம்பெற்றுள்ளன. 9,020 சதுர அடியில் அமைக்கப்படும் இரண்டாம் தளத்தில் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் வைப்பறையும், 1,140 சதுர அடியில் அமைக்கப்படும் மூன்றாம் தளத்தில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மதுரை கீழக்கரை ஜல்லிக்கட்டு அரங்கத்தில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி, வரும் 24ஆம் தேதி நடைபெற உள்ளது.இதில் பங்கேற்க உள்ள மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு முன்பதிவு இன்று தொடங்கியது. இன்று பிற்பகல் 12 மணிக்கு தொடங்கிய முன்பதிவு, நாளை பிற்பகல் 12 மணிக்கு நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் madurai.nic.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.