வடமலாப்பூரில் விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு!
புதுக்கோட்டை அருகே வடமலாப்பூரில் பிடாரி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று நடைபெற்றது.
தமிழ்நாட்டில் அதிகமான வாடிவாசலை கொண்ட மாவட்டமாகவும், எண்ணற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் மாவட்டமாகவும் புதுக்கோட்டை திகழ்ந்து வருகிறது. அதை பறைசாற்றும் விதத்தில் இந்தாண்டில் முதல் ஜல்லிக்கட்டு கடந்த எட்டாம் தேதி தச்சங்குறிச்சியில் நடைபெற்றது.
இதையடுத்து, புதுக்கோட்டை அருகே உள்ள வடமலாப்பூரில் பிடாரி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருவது வழக்கம். அந்த வகையில், இன்று ( 18.01.2024) காலை ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.
மேலும், இந்த ஜல்லிக்கட்டு போட்டியை தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னதாக புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் ஜல்லிக்கட்டு உறுதிமொழி வாசிக்க வீரர்கள் உள்ளிட்ட அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டனர்.
இதையும் படியுங்கள் : “ஆளுநர்கள் மலிவான, தரம்தாழ்ந்த அரசியல் செய்யும் அவலத்தை இந்தியா இப்போது தான் காண்கிறது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
இந்த ஜல்லிக்கட்டில் தமிழ்நாடின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 800 காளைகளும் 250 காளையர்களும் பங்கேற்றன. இதில் ஜல்லிக்கட்டு காளைகள் உரிய மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தகுதியான காளைகள் மட்டுமே வாடிவாசலுக்குள் அனுமதிக்கப்பட்டன. அதே போல், காளையர்களும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே வாடிவாசலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.