ஜலாபிஷேக யாத்திரை - ஹரியானாவில் இணையம், எம்எம்எஸ் சேவை முடக்கம்!
கடந்தாண்டு வன்முறையால் பாதிக்கப்பட்ட ஜலாபிஷேக யாத்திரையை முன்னிட்டு ஹரியானாவின் நூ மாவட்டத்தில் 24 மணிநேரத்திற்கு இணைய மற்றும் எம்எம்எஸ் சேவையை முடக்குவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
ஹரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜூலை 31-ம் தேதி விஷ்வஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் பிரஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்திரை நடந்தது. அப்போது ஊர்வலத்தை தடுக்க முயன்ற கும்பலால், இரண்டு ஊர்க்காவல் படையினர் கொல்லப்பட்டனர். மேலும் காவலர்கள் உட்பட 15 பேர் வரையில் காயம் அடைந்தனர்.
தொடர்ந்து அன்று இரவே குருகிராமில் இருந்த ஒரு மசூதியின் மீது தாக்குதல் நடத்தி அம்மசூதியின் இமாமை கொன்றனர். இதனால் தொடர்ந்து இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் 6 பேர் பலியாகினர்.
இந்நிலையில் இச்சம்பவத்தின் முதல் ஆண்டை முன்னிட்டு மீண்டும் அசம்பாவிதம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் நூ மாவட்டத்தில் இன்று மாலை 6 மணி முதல் முதல் நாளை மாலை 6 மணி வரை 24 மணி நேரத்திற்கு இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப், பேஸ்புக், எக்ஸ் தளம் உள்ளிட்ட சமூக வலை தளங்கள் மூலம் தவறான தகவல்கள் மற்றும் வதந்திகள் பரவுவதை தடுக்கும் வகையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை அம்மாநில கூடுதல் தலைமை செயலாளர் (உள்துறை) அனுராக் ரஸ்தோகி பிறப்பித்துள்ளார்.