விநாயகர் கோயிலில் சமண தீர்த்தங்கரர் சிற்பம் வழிபாடு - #Tirukovilur-ல் ஆய்வில் தகவல்!
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே விநாயகர் கோயிலில் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த சமண தீர்த்தங்கரர் சிற்பம் வழிபாட்டில் இருப்பது கண்டறியப்பட்டது.
திருக்கோவிலூர் அருகிலுள்ள கழுமலம், சாங்கியம் கிராமங்களில் விழுப்புரத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவன், க.பாரதிதாசன், கழுமலம் ஏ.பூங்குன்றன் ஆகியோர் அண்மையில் கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, கழுமலம் கிராமத்திலுள்ள விநாயகார் கோயிலில் ஆயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்த சமண தீர்த்தங்கரர் சிற்பம் வழிபாட்டில் இருப்பது கண்டறியப்பட்டது.
இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் கூறியதாவது :
"கழுமலம் கிராமத்தின் வடக்குத் தெருவில் விநாயகர் கோயில் அமைந்துள்ளது. கோயிலுக்குள் சமண சமயத்தின் 24-வது தீர்த்தங்கரரான மகாவீரர் சிற்பமும் விநாயகருடன் வைத்து வழிபடப்பட்டு வருகிறது. மகாவீரர் தவக்கோலத்தில் அமர்ந்துள்ளார். அவரது தலைக்கு மேலே முக்குடை காட்டப்பட்டுள்ளது. இரண்டு பக்கங்களிலும் சாமதாரிகள் (பெண்கள்) இருவர் சாமரம் வீசுகின்றனர்"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் : Hyderabad | விநாயகர் சிலை கையில் வைக்கப்பட்டிருந்த மெகா லட்டு - ரூ.1.87 கோடிக்கு ஏலம்!
மகாவீரர் சிற்பத்தின் காலம் கி.பி.10 - 11ம் நூற்றாண்டு என்பதை புதுச்சேரியைச் சேர்ந்த மூத்த கல்வெட்டு ஆய்வாளர் விஜய வேணுகோபால் உறுதிப்படுத்தியுள்ளார். கழுமலம் பகுதியில் முன்பு சமணக் கோயில் இருந்து, பின்னர் மறைந்திருக்க வேண்டும். தற்போது தீர்த்தங்கரர் சிற்பம் மட்டும் எஞ்சியுள்ளது. சமணச் சிற்பம் என்பதை அறியாமலேயே விநாயகர் கோயிலுக்குள் வைத்து பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். கழுமலம் கிராமத்தில் சைவ அடியவர் அல்லது மடத்தின் தலைவர் என்று அறியப்படும் சிற்பம், அம்மன் சிற்பமும் காணப்படுகின்றன. இவை கி.பி.17-18ஆம் நூற்றாண்டைச் சோ்ந்தவை என தெரிவித்துள்ளனர்.