கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் ஜெகரண்டா மலர்கள்!
கொடைக்கானல் மலைப்பகுதியில் பூத்துக் குலுங்கும் ஜெகரண்டா மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது கொடைக்கானல். மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமான இங்கு ஆண்டு முழுவதும் இதமான சீசன் நிலவி வரும். கொடைக்கானலில் கால நிலைக்கு ஏற்ப பல்வேறு வகையிலான மலர்கள் பூத்து குலுங்கும் .
தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தருகின்றனர். வார விடுமுறை, தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும்.
ஜெகரண்டா மிமோசி போலியா என்ற தாவரவியல் பெயர் கொண்ட லாவண்டர் நீல நிற பூக்கள் தற்போது கொடைக்கானல் மலைப்பகுதியில் பல்வேறு பகுதிகளில் பூத்துள்ளன. குறிப்பாக பெருமாள்மலை சாலையில் அதிக அளவில் பூத்துள்ளது . இந்த ஜெகரண்டா மலர்கள் மரங்களில் மட்டுமே பூக்கக்கூடிய வகையைச் சேர்ந்தது. கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாக இந்த மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. மேலும் சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தும் வருகின்றனர் .