சந்திரபாபு நாயுடு ஒரு சர்வாதிகாரி... ஜெகன்மோகன் ரெட்டி குற்றச்சாட்டு!
சந்திரபாபு நாயுடு ஒரு சர்வாதிகாரி என முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவி ஏற்க, ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் துணை முதல்வராக பதவி ஏற்றார். இந்த நிலையில், குண்டூர் மாவட்டத்தில் கட்டப்பட்டு வந்த முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி அலுவலகம் இடிக்கப்பட்டுள்ளது.
அப்போது அங்கு குவிந்த கட்சி தொண்டர்கள், முதலமைச்சர் சந்திர பாபு நாயுடுவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது. "சந்திரபாபு நாயுடு பழிவாங்கும் அரசியலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார்" என கட்சி அலுவலக இடிப்பு குறித்து ஜெகன்மோகன் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இது போன்ற மிரட்டல்களை ஏற்க முடியாது என முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ட்வீட் செய்துள்ளார்.
இதுகுறித்து ஜெகன் மோகன் ரெட்டி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஆந்திராவில், சந்திரபாபு நாயுடு அடக்குமுறையை கையிலெடுத்துள்ளார்.
தப்பள்ளியில் கிட்டத்தட்ட கட்டி முடிக்கப்பட்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மத்திய அலுவலகத்தை சர்வாதிகாரி போல் புல்டோஸர் மூலம் இடித்துள்ளார். உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகள் புறக்கணிக்கப்பட்டன.
சந்திரபாபு நாயுடு, இந்த ஐந்தாண்டு கால ஆட்சி எப்படி இருக்கப்போகிறது என்ற வன்முறை செய்தியை இந்த சம்பவத்தின் மூலம் தந்துள்ளார். இந்த அச்சுறுத்தல்கள், வன்முறைகளுக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அடிபணியாது. பின்வாங்கவும் செய்யாது என்றும் ஜெகன் மோகன் ரெட்டி குறிப்பிட்டுள்ளார்.