லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகளை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் தனது இன்னிங்ஸில் 176 ரன்களை சேர்த்துள்ளது. இதில் ரவீந்திர ஜடேஜா அரைசதம் விளாசினார்.
17வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மார்ச் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கதில் தொடங்கி மே 26-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதில் சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், டெல்லி, பஞ்சாப், குஜராத், லக்னோ, ராஜஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இந்நிலையில், 34வது லீக் போட்டி லக்னோ உள்ள ஏகானா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணியளவில் தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளும் மோதுகின்றன. இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதில் ஓப்பனராக களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா 2ஆவது ஓவரிலேயே டக்அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து ருதுராஜ் கெய்க்வாட்டும் 4வது ஓவரில் கேட்ச் கொடுத்து 17 ரன்களில் வெளியேறினார். 6 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்த சிஎஸ்கே 51 ரன்களைச் சேர்த்தது. ஓரளவுக்கு ஆடிய அஜிங்க்ய ரஹானேவை 9ஆவது ஓவரில் போல்டாக்கினார் கிருணல் பாண்டியா.
36 ரன்களில் ரஹானே அவுட். அடுத்து வந்த ஷிவம் துபே 3 ரன்களிலும், சமீர் ரிஸ்வி 1 ரன்கள் என அவுட்டாக தடுமாறிய சென்னை அணி 15 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்களை சேர்த்தது. ஸ்கோரை ஏற்றும் முயற்சியில் மொயின் அலி 18ஆவது ஓவரில் ஹாட்ரிக் சிக்சர்களை விளாசினாலும் அதற்கு அடுத்த பந்தே 30 ரன்களில் விக்கெட்டானார். மறுபுறம் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திக்கொண்டிருந்த ஜடேஜாவுடன் 7ஆவது விக்கெட்டுக்கு கைகோத்தார் தோனி. அவர் விளாசிய 2 சிக்சர்ஸால் அரங்கமே உற்சாகமடைந்தது.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த சிஎஸ்கே 176 ரன்களைச் சேர்த்தது. இதனால், லக்னோ அணிக்கு 177 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஜடேஜா 57 ரன்களுடனும், தோனி 28 ரன்களுடனும் விக்கெட்டாகாமல் களத்தில் இருந்தனர். லக்னோ அணி தரப்பில், கிருணல் பாண்டியா 2 விக்கெட்டுகளையும், ரவி பிஷ்னோய், மார்கஸ் ஸ்டாயினிஸ், மொஹ்சின் கான், யஷ் தாக்கூர் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.