ஜாபர் சாதிக் விவகாரம் | NCB இயக்குநர் ஞானேஷ்வர் சிங்கிற்கு திடீர் சிக்கல்!
போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாக தவறான பல தகவல்களை தெரிவித்த NCB துணை தலைமை இயக்குநர் ஞானேஷ்வர் சிங்குக்கு எதிராக விசாரணை நடத்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு இயக்குநர் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் பிடிபட்ட 2000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் வழக்கில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு துணை தலைமை இயக்குநர் ஞானேஸ்வர்சிங் செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு பணம் பரிமாறப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.
மேலும் போதைப் பொருள் கடத்தலில் சம்பாதித்த பணத்தை ஜாபர் சாதிக் திரைத்துறையில் முதலீடு செய்துள்ளதாகவும் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியதாகவும் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு துணை தலைமை இயக்குநர் சிங்கிற்கு எதிராக ஜாபர் சாதிக் தரப்பிலிருந்து புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் மீது விசாரணை நடத்துமாறு மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஞானிஸ்வர் சிங்கிற்கு இணையான பொறுப்பில் உள்ள மேற்கு மண்டல துணை தலைமை இயக்குநர் மனிஷ் குமார் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
ஞானேஸ்வர் சிங்குக்கு எதிரான புகாரில் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கும்போது அரசியல் உள்நோக்கத்துடன் பரபரப்பு புகழுக்காக ஞானேஸ்வர் சிங் அவ்வாறு நடந்து கொண்டதாகவும் மத்திய உள்துறை செயலாளருக்கும் தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு தலைமை இயக்குநருக்கும் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் தற்போது விசாரணையை தொடங்கியுள்ளது தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு.