"லைக்ஸ் கெத்து அல்ல, மார்க்ஸ்தான் கெத்து" - மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை!
சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற தனியார் பள்ளியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
அவர் தனது உரையில், சமூக ஊடகங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) வளர்ச்சி குறித்துப் பேசினார். "தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி ஒரு புதிய புரட்சியை உருவாக்கி வருகிறது. எந்தவொரு கண்டுபிடிப்பையும் உங்களின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டுமே தவிர, அது உங்களின் சொந்த சிந்தனையைச் சிதைக்க அனுமதிக்கக் கூடாது" என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்கள் குறித்துப் பேசிய முதலமைச்சர், "உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான ரோல் மாடல்களை இன்ஸ்டாகிராமில் தேடாதீர்கள். சமூக வலைத்தளங்களில் கிடைக்கும் 'லைக்ஸ்' மற்றும் 'வியூஸ்' ஆகியவை உண்மையான மதிப்பு அல்ல. அவை தற்காலிகமானவை" என்று கூறினார்.
"உண்மையான வெற்றி, உங்கள் படிப்பு, உங்கள் மார்க்ஸ் மற்றும் நீங்கள் பெறும் டிகிரிகளில்தான் உள்ளது. அதில்தான் உண்மையான கெத்து இருக்கிறது. அதுவே உங்கள் எதிர்காலத்திற்கு நிலையான அடித்தளத்தை அமைக்கும்" என்று அவர் வலியுறுத்தினார்.