“சர்க்கஸுக்குச் செல்வது போல்...” - சென்னை அணியின் ஆட்டத்தை விமர்சித்த விஷ்ணு விஷால்!
நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் சென்னை அணி தொடர் தோல்வியை தழுவி, வெறும் ஒரே ஒரு போட்டியில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 9வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இது குறித்து கிரிக்கெட் வர்ணனையாளர் சிலர் தோனி ஓய்வு பெறுவது, ருதுராஜ் கேப்டன்சி, சென்னை அணியின் பீல்டிங் போன்றவைகளை குறித்து தொடர் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
இந்த சூழலில் சென்னை அணி தோனி தலைமையில் கொல்கத்தா அணியை இன்று(ஏப்ரல்.11) சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொண்டு வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி கொல்கத்தா அணியிடம் 9 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இதனால் சென்னை அணி ரசிகர்கள் உட்பட பலர் தங்களது ஏமாற்றத்தை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கொல்கத்தா அணிக்கு எதிரான சென்னை அணியின் ஆட்டம் குறித்து நடிகர் விஷ்ணு விஷால் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நான் ஒரு கிரிக்கெட் வீரராக இருப்பதைத் தவிர்த்துவிட்டேன், தவிர்த்துவிட்டேன், தவிர்த்துவிட்டேன்...நான் சீக்கிரம் ஒரு முடிவுக்கு வர விரும்பவில்லை... ஆனால் இது கொடூரமானது... ஏன் இவ்வளவு கீழ் வரிசையில் வர வேண்டும்.. எந்தவொரு விளையாட்டும் வெற்றி பெறுவதற்காக விளையாடப்படவில்லையா? இது இப்போது ஒரு சர்க்கஸுக்குச் செல்வது போல... எந்தவொரு தனிமனிதனும் விளையாட்டை விட பெரியவன் அல்ல.....” என்று கூறியுள்ளார்.